'75 வயதில் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும்': மோகன் பகவத் பேச்சால் கலகலக்கும் அரசியல் களம்
'75 வயதில் தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும்': மோகன் பகவத் பேச்சால் கலகலக்கும் அரசியல் களம்
ADDED : ஜூலை 12, 2025 01:59 AM

நாக்பூர்: ''தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், 74, தெரிவித்துள்ளது, தேசிய அரசியலில் விவாதத்தை துாண்டி உள்ளது.
மஹாராஷ்டிராவின் நாக்பூரில், மறைந்த ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோரோபந்த் பிங்கிளே பற்றிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:
மோரோபந்த் பிங்கிளேவுக்கு, 75 வயது ஆன போது, உத்தர பிரதேசத்தின் பிருந்தாவனில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., கூட்டத்தில் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. அந்த விழாவில் அவர் தெரிவித்த கருத்துக்களை, நான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கூட்டத்தில் பேசிய மோரோபந்த் பிங்கிளே, 'என்னை பார்த்ததும் மக்கள் சிரிக்கத் துவங்குகின்றனர். ஏனென்றால், அவர்கள் என்னை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு 75 வயது ஆனதால், சால்வை அணிவித்து மரியாதை செலுத்துகிறீர்கள். இதன் அர்த்தம் என்னவென்று எனக்கு நன்றாக தெரியும்.
'எனக்கு வயதாகி விட்டது; ஒதுங்கிச் செல்லுங்கள்; மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என, மறைமுகமாக கூறுகிறீர்கள்' என, கூறினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சு, தேசிய அரசியலில் விவாதத்தை துாண்டி உள்ளது. 'செப்டம்பரில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோருக்கு, 75 வயது ஆகப் போகிறது.
அப்படி என்றால் அவர்கள் ஓய்வு பெறுவரா?' என, எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும், ஓய்வுக்கு பிந்தைய திட்டங்களை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பரில், 75 வயது ஆகப் போகிறது என்பதை, பிரதமர் மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் நினைவூட்டி உள்ளார். அவருக்கும் அதே மாதத்தில் 75 வயது ஆகப் போகிறது என, மோடியும் பதில் சொல்லலாம். ஆக மொத்தம், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
--ஜெய்ராம் ரமேஷ், காங்., பொதுச்செயலர்
என்ன சொல்கிறது பா.ஜ., விதி?
பா.ஜ., கட்சி விதிகளின்படி, 75 வயதில் தலைவர்களுக்கு எந்தவொரு பதவியும் வழங்கப்படுவதில்லை. மேலும் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு இல்லை. 75 வயதை கடந்த பின், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. வயது மூப்பு காரணமாகவே, கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது.