ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு: 60 பயணியரை காப்பாற்றி உயிரிழந்தார்
ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு: 60 பயணியரை காப்பாற்றி உயிரிழந்தார்
ADDED : ஜன 30, 2024 05:10 PM

புவனேஸ்வர்: ஒடிசாவில் 60 பயணிகளுடன் சென்ற பஸ் டிரைவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பஸ்சை நிறுத்திய பிறகு அவரது உயிர் பிரிந்தது. பயணிகள் அனைவரும் காயமின்றி தப்பினர்.
மேற்கு வங்கத்தில் இருந்து ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஞ்சலிங்கேஸ்வரர் கோயிலுக்கு 60 சுற்றுலா பயணிகளுடன் பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை, ஷேக் அக்தர் என்பவர் ஓட்டி வந்தார். பாலசோர் மாவட்டத்தில் பட்பூர் சாய்க் என்ற இடத்தில் பஸ் வந்த போது டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால், அவர் பஸ்சை சாலையில் ஓரத்தில் நிறுத்திவிட்டு மயக்கமடைந்தார். பயந்து போன பயணிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் வந்து, ஷேக் அக்தரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
ஷேக் அக்தர், மாரடைப்பு ஏற்பட்டதும் சமயோஜிதமாக செயல்பட்டு பஸ்சை ஓரத்தில் நிறுத்தியதால், அதில் இருந்த 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் டிரைவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.