'குடும்ப தலைவியின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது'
'குடும்ப தலைவியின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது'
ADDED : பிப் 18, 2024 02:03 AM

புதுடில்லி, 'ஒரு குடும்பத் தலைவியின் பணிகளை பணத்தால் மதிப்பிட முடியாது. வேலை செய்யும் பெண்களைவிட, குடும்பத் தலைவியின் பணிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
உத்தரகண்டைச் சேர்ந்த ஒரு பெண் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இழப்பீடு கேட்டு அவருடைய கணவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த, மோட்டார் வாகன சட்டத் தீர்ப்பாயம், இந்தப் பெண், குடும்பத் தலைவியாக உள்ளதால், தினசரி கூலி வேலை செய்வோர் ஈட்டும் வருவாயைவிட குறைந்த தொகையை இழப்பீடாக அறிவித்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், அதை உறுதி செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சூரியகாந்த், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கூறியதாவது:
வீட்டு வேலைகளை கவனிக்கும் பெண்கள் மிகவும் உயர்வானவர்கள். அவர்களது பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது; அதை பணத்தால் மதிப்பிடவும் முடியாது.
வேலைக்குச் செல்லும் பெண்களைவிட, குடும்பத் தலைவியின் பணிகள் குறைந்தது அல்ல.
அவர்கள் குடும்பத்துக்காக செலவிடும் நேரத்தை, பணத்தால் கணக்கிட இயலாது. அது மதிப்பிட முடியாத பங்களிப்பாகும்.
இந்த விஷயத்தில், தினக்கூலி வேலை செய்பவர்களைவிட குறைந்த அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது. அந்தப் பெண், குடும்பத் தலைவிதான் என்று கூறப்பட்டுள்ளதையும் ஏற்க முடியாது.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
இதையடுத்து, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட, இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீட்டை, ஆறு லட்சம் ரூபாயாக உயர்த்தி, அமர்வு உத்தரவிட்டது.