ADDED : பிப் 13, 2025 01:29 AM

ராய்ச்சூர், : கர்நாடக மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம், ஜங்காபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கப்பா, 68. இவர், 2012ல் தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டார். 2013ல் இவருக்கு ராய்ச்சூர் செஷன்ஸ் நீதிமன்றம், ஆயுள் தண்டனை, 1.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
அபராதம் கட்ட தவறினால், கூடுதலாக 18 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கும்படி உத்தரவிட்டது. தொடர்ந்து, 12 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த துர்கப்பா, நன்னடத்தை காரணமாக 2024ல் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால், அபராதம் செலுத்தாததால், சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. அவரது குடும்பத்தினர் வசதி இல்லாதவர்கள். அவர்களாலும் பணம் கட்ட முடியவில்லை.
இதற்கிடையில், துர்கப்பா சிறையில் பல ஆண்டுகளாக சமையல் வேலை செய்து வந்தார். ஆரம்பத்தில் அவருக்கு தினமும் 100 முதல் 150 ரூபாய் வரை ஊதியம் இருந்தது.
அதன்பின் கர்நாடக அரசு, கைதிகளின் தினக்கூலியை 524 ரூபாயாக அதிகரித்தது. எனவே, அவரது சம்பளமும் அதிகரித்தது. அவரது வங்கி கணக்கில் 2.8 லட்சம் ரூபாய் இருந்தது.
இதையடுத்து, கலபுரகி சிறை அதிகாரி அனிதா, துர்கப்பாவுக்கு உதவ முன் வந்தார். இரண்டு நாட்களுக்கு முன், அவரை கலபுரகியின் எஸ்.பி.ஐ., வங்கி கிளைக்கு அழைத்துச் சென்று 1.1 லட்சம் ரூபாயை எடுக்க உதவினார். இந்த பணத்தை ராய்ச்சூர் சிறையில் செலுத்திவிட்டு, சிறையில் இருந்து துர்கப்பா விடுதலை ஆனார்.