ADDED : அக் 03, 2024 11:44 PM

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், 61. இவர், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார்.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசாருதீன் பதவி வகித்த போது, ஹைதராபாதின் உப்பலில் ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது.
இந்த பணிகளில் அசாருதீன், 20 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடியில் ஈடுபட்டதாக தெலுங்கானா லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், குற்றப்பத்திரிகைதாக்கல் செய்தனர்.
இதன் அடிப்படையில், அசாருதீன் மீது பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
அசாருதீனுக்கு சொந்தமான இடங்களில், சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது.
இந்த வழக்கு குறித்து விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜராகும்படி அசாருதீனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அவர் அவகாசம் கோரியதை அடுத்து, வரும் 8ல் ஆஜராகும்படி புதிதாக சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது.