ஹேமந்த் சோரன் வீட்டில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் பறிமுதல்
ஹேமந்த் சோரன் வீட்டில் ரூ.36 லட்சம் ரொக்கம், சொகுசு கார் பறிமுதல்
UPDATED : ஜன 30, 2024 05:58 PM
ADDED : ஜன 30, 2024 12:23 PM

புதுடில்லி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமறைவாக உள்ளார் என்ற நிலையில், இன்று மதியம் ராஞ்சியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். முன்னதாக டில்லி வீட்டில் ரூ.36 லட்சம் ரொக்கம், 2 சொகுசு கார்கள் மற்றும் பணமோசடி தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனால் ஜார்க்கண்டில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் (48) உள்ளார். இவர் மீது, நிலமோசடி விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய 7 சம்மன்களை ஹேமந்த் சோரன் புறக்கணித்து இருந்தார்.
இந்நிலையில், நேற்று ஹேமந்த் சோரனிடம் விசாரிக்க டில்லியின் மோதிலால் தெருவில் உள்ள அவரது தந்தை வீட்டிற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், முதல்வர் இல்லத்திற்கும் சென்றனர். அங்கும் அவர் இல்லை. இதனால் அதிகாரிகளால் விசாரிக்க முடியவில்லை.
பறிமுதல்
டில்லியில் உள்ள முதல்வர் வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்ததில் ரூ.36 லட்சம் ரொக்கம், 2 பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
144 தடை உத்தரவு
ஜார்க்கண்ட் மாநிலம் முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சோரன் வீட்டிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஆலோசனை
டில்லியில், ஹேமந்த் சோரன் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், இன்று மதியம் அவர் ராஞ்சியில் காணப்பட்டார். அங்கு தனது கட்சி எம்.எல்.ஏ.,க்கள், மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஹேமந்த் சோரன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவரது மனைவி கல்பனாவும் பங்கேற்றார். இதனால், மாநிலத்தின் அடுத்த முதல்வராக கல்பனா நியமிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
கவர்னர் ஆலோசனை
முதல்வர் குறித்து பரபரப்பான சூழல் காணப்படும் நிலையில், கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை மாநில டிஜிபி சந்தித்து பேசினார். அப்போது, மாநிலத்தில் நிலவும் சூழல் குறித்து விளக்கினார்.
மனைவியை முதல்வராக்க திட்டமா?
பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே கூறுகையில், ‛‛ஹேமந்த் சோரன் விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளாமல் தப்பியோடுகிறார். அவர் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் அவமானங்களை சந்தித்து வருகிறார். அவரால் எப்படி மக்களை பாதுகாக்க முடியும். தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்களை ராஞ்சிக்கு வருமாறு அழைத்துள்ளார். எனக்கு கிடைத்த தகவல்படி, மனைவி கல்பனாவை முதல்வராக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.