பண மோசடி வழக்கு: சரத்பவார் பேரனிடம் அமலாக்கத்துறை 11 மணி நேரம் விசாரணை
பண மோசடி வழக்கு: சரத்பவார் பேரனிடம் அமலாக்கத்துறை 11 மணி நேரம் விசாரணை
ADDED : ஜன 24, 2024 11:15 PM

மும்பை : மஹாராஷ்டிராவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முறைகேடு வழக்கில் சரத்பவார் பேரனிடம் அமலாக்கத்துறை 11 மணி நேரம் விசாரணை நடத்தியது.
மஹாராஷ்டிராவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை முறைகேடாக விற்றதாக, 2019 ஆகஸ்டில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவால் இந்த விவகாரத்தில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்தது.
தேசியவாத காங்., தலைவர் சரத் பவாரின் பேரனும், கஜ்ரட் ஜாம்கேடு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ரோஹித் பவாருக்கு சொந்தமான பாராமதி அக்ரோ நிறுவனம் மற்றும் சில இடங்களில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்; விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர்.
அமலாக்க துறை அலுவலகத்தில் இன்று (24 -ம் தேதி) ரோஹித் பவார் ஆஜரானார். அவரிடம் 11 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.
முன்னதாக, தேசியவாத காங்., தலைமை அலுவலகத்துக்கு சென்று தாத்தாவை ரோஹித் சந்தித்தார். அமலாக்க துறையை கண்டித்து கட்சி அலுவலகத்தில், தேசியவாத காங்., தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

