திருப்பதியில் சிறப்பு தரிசனம் பெயரில் தோனியின் மேலாளரிடம் பண மோசடி
திருப்பதியில் சிறப்பு தரிசனம் பெயரில் தோனியின் மேலாளரிடம் பண மோசடி
ADDED : பிப் 04, 2024 06:05 AM

பெங்களூரு : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய உதவி செய்வதாகக் கூறி, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனியின் மேலாளரிடம் 6.33 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இவரிடம் மேலாளராக இருப்பவர் சாமிநாதன் சங்கர். கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில், சாமிநாதனிடம் மொபைல் போனில் பேசிய ஒருவர், தன்னை கர்நாடகா ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்றும், மத்திய அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உதவியாளர் எனவும் கூறி உள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி, பெங்களூரில் வைத்து சாமிநாதனை சந்தீப், சல்மான் ஆகியோர் சந்தித்தனர். 'ஐ.ஏ.எஸ்., அதிகாரி கூறியதால் உங்களை சந்திக்க வந்தோம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம், தங்கும் வசதிகள் உங்களுக்கு தேவைப்பட்டால் ஏற்படுத்திக் கொடுக்கிறோம்' என்று இருவரும் கூறி உள்ளனர். ''ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்கிறேன்,'' என்று கூறி, இருவரையும், சாமிநாதன் அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின்னர் சில நாட்கள் கழித்து சாமிநாதனிடம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்று கூறியவர் பேசி உள்ளார். 'திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்ய 12 பாஸ் உள்ளது. தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். துபாயில் இருப்பதாக கூறிய சாமிநாதன், பெங்களூரு கூட்லு கேட்டில் வசிக்கும், நண்பரை பாஸ் வாங்க அனுப்பி வைத்து உள்ளார்.
சாமிநாதனின் நண்பரிடம் இருந்து, திருப்பதியில் தங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்து தருகிறோம் உட்பட, பல காரணங்களை கூறி 6.33 லட்சம் ரூபாய் வசூலித்து உள்ளனர். ஆனால் சாமி தரிசனம் செய்ய, பாஸ் கொடுக்காமலும், பணத்தைத் திரும்ப தராமலும் மோசடி செய்து உள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட் போலீசில் சாமிநாதன் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
அதன்பேரில் மூன்று பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.