தூதரக அதிகாரிகளை கண்காணிப்பதா? கனடா மீது இந்தியா கோபம்
தூதரக அதிகாரிகளை கண்காணிப்பதா? கனடா மீது இந்தியா கோபம்
UPDATED : நவ 02, 2024 10:30 PM
ADDED : நவ 02, 2024 10:27 PM

புதுடில்லி: இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளை கண்காணிப்பதை கனடா அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என இந்தியா கூறியுள்ளது.
டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது:இந்திய தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர், ஆடியோ மற்றும் வீடியோ மூலம் கண்காணிப்பில் இருப்பதாக கனடா அரசு கூறியுள்ளது. அவர்களின் தகவல்தொடர்புகளும் இடைமறிக்கப்படுகின்றன. இது எங்களின் கவனத்திற்கு வந்துள்ளது. இவை அனைத்தும் ராஜதந்திர மற்றும் தூதரக உடன்படிக்கைகளை அப்பட்டமாக மீறும் செயல். இதற்காக கனடா அரசுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.
தொழில்நுட்ப காரணங்களை மேற்கோள்காட்டி, துன்புறுத்தல் மற்றும் மிரட்டலில் ஈடுபடுவதை கனடா அரசு நியாயப்படுத்த முடியாது. எங்கள் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வன்முறை மற்றும் பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணியாற்றுகின்றனர். கனடா அரசின் இந்த நடவடிக்கை நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது. இது தூதரக விதிமுறைகளுக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறினார்.