ADDED : ஜன 16, 2025 06:26 AM

சிக்கமகளூரு: சிக்கமகளூரில் குரங்கு காய்ச்சல், வேகமாக பரவுவதால் சுகாதாரத்துறை உஷாராகியுள்ளது. துறை அதிகாரிகள் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வுஏற்படுத்துகின்றனர்.
இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிக்கமகளூரில் கோடை காலத்தில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும். ஆனால், நடப்பாண்டு ஜனவரியிலேயே, குரங்கு காய்ச்சல் வேகமாக பரவ துவங்கியுள்ளது. வானிலை மாற்றமும் இதற்கு காரணமாகும். சிக்கமகளூரின், மத்திபன்டா கிராமத்தில் வசிக்கும் 25 வயது இளைஞர், சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். ரத்த பரிசோதனை செய்ததில், அவருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டது உறுதியானது. இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்தாண்டு சிக்கமகளூரில், 132 பேருக்கு இக்காய்ச்சல் ஏற்பட்டது. நால்வர் உயிரிழந்தனர். வனப்பகுதியை ஒட்டியுள்ள சிக்கமகளூரு, கொப்பா, என்.ஆர்.புரா, சிருங்கேரி தாலுகாக்களில் குரங்கு காய்ச்சல் பீதி உள்ளது.
இம்முறை ஆண்டின் துவக்கத்திலேயே, காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வனப்பகுதிக்கு செல்ல கூடாது; கால்நடைகளையும் அங்கு மேய விட வேண்டாம்.
குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுத்துள்ளது. நோய் தீவிரமடையாமல் இருக்க வீடு, வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறையின் விதிமுறைகளை மக்கள் பின் பற்ற வேண்டும். இல்லையென்றால் நோயை தடுக்க முடியாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

