தலைநகர் டில்லி சட்டசபை வளாகத்தில் திரியும் குரங்குகள்; விரட்ட 'மிமிக்ரி' செய்வோர் நியமிக்க முடிவு
தலைநகர் டில்லி சட்டசபை வளாகத்தில் திரியும் குரங்குகள்; விரட்ட 'மிமிக்ரி' செய்வோர் நியமிக்க முடிவு
ADDED : ஜன 03, 2026 12:11 AM

புதுடில்லி: சட்டசபை வளாகத்தில் திரியும் குரங்குகளை விரட்ட, குரங்கு போலவே, 'மிமிக்ரி' செய்பவர்களை நியமிக்க டில்லி சட்டசபை செயலகம் முடிவு செய்துள்ளது.
டில்லி சட்டசபை வளாகத்தில் ஏராளமான குரங்குகள் திரிகின்றன. மின் கம்பிகள் மற்றும் டிஷ் ஆன்டனாக்கள் ஆகியவற்றை சிதைக்கின்றன. மேலும், எம்.எல்.ஏ.,க்கள், செயலக ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தக் குரங்குகளை சட்டசபை வளாகத்தில் இருந்து விரட்ட, குரங்கைப் போலவே மிமிக்ரி செய்பவர்களை நியமிக்க பொதுப்பணித் துறை டெண்டர் கோரியுள்ளது.
இதுகுறித்து, டில்லி சட்டசபை செயலக மூத்த அதிகாரி கூறியதாவது: வளாகம் முழுதும் பிரமாண்ட குரங்கு படங்கள் வைக்கப்பட்டன. ஆனால், அவற்றைப் பார்த்து குரங்குகள் பயப்படவில்லை. மாறாக அந்தப் படத்தின் மீதே அமர்ந்து கொண்டன. எனவே, மிமிக்ரி வாயிலாக விரட்ட முடிவு செய்யப்பட்டது.
குரங்கு போலவே மிமிக்ரி செய்பவர்கள் ஏற்கனவே இருந்தனர். அவர்களின் ஒப்பந்தம் முடிந்து விட்டது. எனவேதான், புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளது. மிமிக்ரி செய்யும் ஒவ்வொருவரும் எட்டு மணி நேர ஷிப்டில் நியமிக்கப்படுவர். இந்தப் பணியாளர்களுக்கு செயல்திறன் அடிப்படையில் காப்பீட்டு வசதி வழங்கப்படும். கடந்த, 2017ம் ஆண்டு, சட்டசபைக்குள் நுழைந்த குரங்கால், அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த விவாதம் தடைபட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

