இடுக்கியில் பருவமழை தீவிரம்: அணைகளில் நீர்மட்டம் உயர்வு
இடுக்கியில் பருவமழை தீவிரம்: அணைகளில் நீர்மட்டம் உயர்வு
ADDED : ஜூலை 20, 2025 03:41 AM

மூணாறு:இடுக்கி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை மீண்டும் தீவிரமடைந்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்தை விட வெகு முன்னதாக மே 24ல் துவங்கி ஏற்கனவே மூன்று கட்டங்களாக பலத்த மழை பெய்த நிலையில் தற்போது மழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
மாநிலத்தில் ஜூலை 24 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தீவிரம்: இடுக்கி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மேலும் சற்று அதிகரித்தது. நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில் சராசரி மழை 45.42 மி.மீ., பதிவான நிலையில் தொடுபுழா தாலுகாவில் 72.3, தேவிகுளம் 58.2 மி.மீ., மழை பெய்தது. உடும்பன்சோலையில் மிகவும் குறைவாக 19 மி.மீ., மழை பதிவானது.
உயர்வு: இம்மாவட்டத்தில் மழை மீண்டும் தீவிரமடைந்த நிலையில் நீர்வரத்தால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மாநிலத்தில் மிகப்பெரியதான இடுக்கி அணையில் (மொத்த உயரம் 554 அடி) நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்மட்டம் 318.88 அடியாக இருந்தது. இதே கால அளவில் கடந்தாண்டு நீர்மட்டம் 267.69 அடியாக இருந்தது.
அதேபோல் மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணையில் 84.11 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
இதே கால அளவில் கடந்தாண்டு 79.97 சதவீதம் நீர் இருந்தது. குண்டளை, ஆனயிரங்கல், பொன்முடி, கல்லார்குட்டி, மலங்கரா உட்பட பல அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது.