ADDED : மே 24, 2025 01:56 AM
திருவனந்தபுரம்:கேரளாவில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை வலுக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 12 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு நான்கு நாட்கள் முன்னதாகவே இந்த மழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. எனினும் கடந்த சில நாட்களாக கேரளாவில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று முதல் மழை மேலும் வலுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, திருவனந்தபுரம், கொல்லம், இடுக்கி உட்பட 12 மாவட்டங்களுக்கு நேற்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இன்று கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பருவ மழை வலுக்கும் நிலையில் மே 25, 26 தேதிகளில் கேரளாவில் எல்லா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கேரளா, லட்சத்தீவு கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.