மழைக்கால கூட்டத்தொடர் சட்டசபையில் ஆக., 4ல் துவக்கம்
மழைக்கால கூட்டத்தொடர் சட்டசபையில் ஆக., 4ல் துவக்கம்
ADDED : ஜூலை 31, 2025 03:13 AM

புதுடில்லி:டில்லி சட்டசபை மழைக்காலக் கூட்டத் தொடர் ஆகஸ்ட், 4ம் தேதி துவங்குகிறது. எட்டாம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தக் கூட்டத் தொடர், காகித பயன்பாட்டை முற்றிலும் நிறுத்தி, டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து, சபாநாயகர் விஜேந்தர் குப்தா கூறியதாவது:
டில்லி சட்டசபை மழைக்காலக் கூட்டத் தொடர், ஆகஸ்ட் 4ம் தேதி துவங்குகிறது. எட்டாம் தேதி வரை அட்டவணை தயாரிக்கப்படுள்ளது. தேவைப்பட்டால் நீட்டிக்க அலுவல் ஆய்வுக்குழுவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
இந்த மழைக்காலக் கூட்டத் தொடரில், காகிதப் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. சட்டசபையில், சிறப்புக் குறிப்பின் கீழ் பிரச்னை எழுப்ப விரும்பும் எம்.எல்.ஏ.,க்கள், தேசிய 'இ-விதான்' இணையதளம் வாயிலாக, ஒவ்வொரு நாளும் மாலை, 5:00 மணிக்குள் தங்கள் அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும்.
அது, ஆய்வு செய்யப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஒரு துறை தொடர்பான ஒரே பிரச்னையில், எட்டு முதல் 10 வரிகளுக்குள், தங்கள் அறிவிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும்.
சபையில் பேசும்போது, உறுப்பினர்கள் சமர்ப்பிக்கப்பட்ட உரையை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
அதேபோல, கேள்விகள் மற்றும் தீர்மானங்கள் உட்பட அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளம் வாயிலாகவே சமர்ப்பிக்கப்படும்.
எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அவரது உதவியாளர்கள் இணையதளம் வாயிலாக அறிவிப்பை சமர்ப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டால், சேவா கேந்திராவின் தொழில்நுட்ப ஊழியர்களை நாடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

