ADDED : ஜூலை 03, 2025 01:37 AM
புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர், வரும் 21ம் தேதி துவங்குவதற்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்து ஏப்ரல் 4ல் இரு சபைகளும் காலவரை யறையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே, பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கும் என சமீபத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக, சமூக வலைதளத்தில் கிரண் ரிஜிஜு நேற்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, மழைக்கால கூட்டத்தொடரை நடத்த, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இக்கூட்டத்தொடரின் போது, சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. எனவே, ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களும் பார்லிமென்டின் இரு சபைகளும் இயங்காது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.