பறிமுதல் செய்ததை விட கூடுதல் கஞ்சா ஒப்படைப்பு: போலீஸ் தவறால் கடத்தலில் சிக்கிய 4 பேர் விடுதலை
பறிமுதல் செய்ததை விட கூடுதல் கஞ்சா ஒப்படைப்பு: போலீஸ் தவறால் கடத்தலில் சிக்கிய 4 பேர் விடுதலை
ADDED : ஜூலை 13, 2025 04:22 AM

சென்னை: பறிமுதல் செய்ததை விட, கூடுதலாக 6 கிலோ 580 கிராம் கஞ்சாவை, நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்ததால், 230 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை விடுதலை செய்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திராவில் இருந்து, 'ஸ்கார்பியோ' காரில், சென்னைக்கு கஞ்சா கடத்தி வருவதாக, 2022 மார்ச் 10ல், போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, கவரைப்பேட்டை- - சத்தியவேடு சந்திப்பில், கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை
அவ்வழியாக வந்த தமிழக பதிவெண் கொண்ட, 'ஸ்கார்பியோ' காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், பாலிதீன் பைகளில் மறைத்து வைத்திருந்த, 230 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
காரில் இருந்த மதுரை மாவட்டம் கம்மாளப்பட்டியை சேர்ந்த அய்யர், 55, அல்லி நகரத்தைச் சேர்ந்த ஜெயகுமார், 23, எல்லீஸ் நகரை சேர்ந்த சவுந்தரபாண்டி, 22, திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த எட்வின்ராஜ், 24, ஆகியோரை கைது செய்தனர்.
வாகனத்தில் இருந்த சிறுவன் ஒருவனை, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிய போலீசார், மற்ற நான்கு பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு, சென்னை முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்ட சவுந்தரபாண்டி சார்பில், வழக்கறிஞர்கள் டி.சீனிவாசன், ஜி.எஸ்.மகேஷ் ஆஜராகி, 'கைதான நபர்கள் ஆந்திராவில் இருந்து தான் வந்தனர் என்பதை போலீசார் நிரூபிக்கவில்லை.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை, நீதிமன்றத்தில் காலதாமதமாக ஒப்படைத்து உள்ளனர். பறிமுதல் செய்த கஞ்சாவுக்கும், நீதிமன்றத்தில் ஒப்படைத்த கஞ்சாவுக்கும் வித்தியாசம் உள்ளது' என்று வாதாடினர்.
இதையடுத்து, நீதிபதி ராஜலட்சுமி பிறப்பித்த உத்தரவு:
வழக்கில் சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. கவரைப்பேட்டை- - சத்தியவேடு சந்திப்பில் சோதனை நடத்தியதாக கூறிய போலீசார், கவரைப்பேட்டை- - மாடம்பாக்கம் சந்திப்பில், கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளனர்.
இதை பார்க்கும் போது, சம்பவ இடத்துக்கு போலீசார் செல்லவில்லை என்பது தெரிகிறது.
மிக அதிக எடையில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். இந்த வழக்கில் சட்டப்பிரிவுகளின் படி, பொது சாட்சியம் முக்கியமானது. ஆனால், பொது சாட்சிகள் எவரும் சாட்சியம் அளிக்கவில்லை.
கஞ்சா பறிமுதல் செய்ததை, போலீஸ் தரப்பு நிரூபித்துள்ளது. ஆனால், போலீசார் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு செல்லாமல், ஒரு கதையை உருவாக்கி, வழக்கில் நான்கு பேரையும் தவறாக சேர்த்துள்ளனர். இதை குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
நிரூபிக்கவில்லை
பறிமுதல் தொடர்பான மகஜரில், 230 கிலோ கஞ்சா என்று பதிவு செய்துள்ள போலீசார், நீதிமன்றத்தில், 236 கிலோ 580 கிராம் கஞ்சாவை ஒப்படைத்துள்ளனர். பறிமுதல் செய்த கார் யாருக்கு சொந்தமானது என்பதையும் நிரூபிக்கவில்லை. நீதிபதி முன், கஞ்சா மாதிரிகள் எடுக்கப்படவில்லை.
எனவே, தடய அறிவியல் பரிசோதனை அறிக்கை, ஒரு சாதாரண காகிதம் தான். இந்த வழக்கில், போலீசார் குற்றச்சாட்டுகளை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டனர் என்பதால், நான்கு பேரும் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.