வயநாடுக்கு கூடுதல் கிராமப்புறச் சாலைகள்: கேரள அரசிடம் பிரியங்கா வலியுறுத்தல்
வயநாடுக்கு கூடுதல் கிராமப்புறச் சாலைகள்: கேரள அரசிடம் பிரியங்கா வலியுறுத்தல்
ADDED : ஆக 05, 2025 08:07 PM

வயநாடு:வயநாடுக்கு கூடுதலான கிராமப்புறச்சாலைகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேரள அரசிடம் காங்கிரஸ் தலைவரும் வயநாடு எம்பியுமான பிரியங்கா வலியுறுத்தி உள்ளார்.
கேரளா மாநிலத்தின் மலைப்பாங்கான மாவட்டமாக வயநாடு விளங்குகிறது. இந்நிலையில் வயநாடு தொகுதி எம்பியான பிரியங்கா, கேரள அரசிடம், இந்த மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் அமைக்கும்போது, பழங்குடி மக்கள் அடர்த்தி அதிகமாக இம்மாவட்டத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கூடுதல் கிலோமீட்டர் துாரம் கிராமப்புற சலைகளை ஒதுக்க வேண்டும் என்று கேரள மாநில கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு நிறுவனத்திடம் இன்று கேட்டுகொண்டதாக காங்கிரஸ் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பழங்குடி மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள தொகுதிகள் மற்றும் பகுதிகளில் உள்ள பழங்குடி கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் இதில் உள்ளன.
வயநாடு ஒரு லட்சிய மாவட்டமாகவும், கணிசமான பழங்குடி மக்கள் தொகையைக் கொண்டிருப்பதாகவும், அது சிறப்பு பரிசீலனைக்கு தகுதியானது என்றும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
வயநாடு பார்லி தொகுதியின் தனித்துவமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் அனைத்து வளர்ச்சிக்கும் இணைப்பு மிக முக்கியமானது.
கேரளாவில் கட்டப்படவுள்ள 500 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளில், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக வயநாடு மாவட்டத்திற்கு 20 கிலோமீட்டர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அது முற்றிலும் போதுமானதாக இல்லை.
வயநாடு மாவட்டத்தில் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த 300 சாலைகளுக்கான விரிவான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு பிரியங்கா கேரள அரசிடம் கோரியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.