விமான விபத்து மீட்பு பணியில் 150க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்: ராணுவ தளபதி
விமான விபத்து மீட்பு பணியில் 150க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள்: ராணுவ தளபதி
ADDED : ஜூலை 03, 2025 10:31 PM

புனே: ஏர் இந்தியா விமான விபத்து நடந்த சில நிமிடங்களில் மீட்பு பணியில் 150க்கும் மேற்பட்ட வீரர்களை ராணுவம் திரட்டியது என்று தெற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் கூறினார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம், கடந்த மாதம் 12ம் தேதி விபத்துக்குள்ளானது. இதில், பயணித்தவர்கள் உட்பட 270 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் உடனடியாக 150க்கும் மேலான ராணுவ வீரர்கள், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரியில் தேசிய பேரிடர் மேலாண்மை கட்டமைப்பில் பொறியாளர் படையினர் பங்கு மற்றும் ஆபத்து, மீள்தன்மை மற்றும் பதில் என்ற உயர் மட்ட கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் தெற்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் பேசியதாவது:
கடந்த மாதம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்பு பணி நடவடிக்கைகளில் சில நமிடங்களில் 150 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் திரண்டனர்.பேரிடர் நிவாரணம் பணி,திட்டமிடப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு, தடையின்றி செயல்படுத்தப்பட வேண்டிய யதார்த்தமாக மாறிவிட்டது.இதுபோன்ற அவசர நிலைகளில் வீரர்களின் தயார்நிலையை காட்டுகிறது. மேலும் மோசமான வானிலை மற்றும் இருட்டில் கூட வீரர்கள் திறம்பட செயல்பட்டனர்.
இவ்வாறு தீரஜ் சேத் பேசினார்.