மைசூரில் 'ரேவ் பார்ட்டி' 50க்கும் மேற்பட்டோர் கைது
மைசூரில் 'ரேவ் பார்ட்டி' 50க்கும் மேற்பட்டோர் கைது
ADDED : செப் 30, 2024 12:11 AM
மைசூரு : மைசூரு கே.ஆர்.எஸ்., அணையின் பின் பகுதியில் நடந்த ரேவ் பார்ட்டியில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மைசூரு தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதற்கிடையில், கே.ஆர்.எஸ்., அணையின் பின் பகுதியில், 'ரேவ் பார்ட்டி' நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் உத்தரவின்படி, கூடுதல் எஸ்.பி., நாகேஷ், துணை எஸ்.பி., கரீம் ராவுத்தர் மற்றும் போலீசார், குறிப்பிட்ட இடத்தில் நேற்று அதிகாலையில் ரெய்டு நடத்தினர்.
போலீசார் வருவதை பார்த்த இளைஞர்கள், இளம் பெண்கள் பலர் சிதறி ஓடினர். அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்களை போலீசார் கைது செய்தனர். 30 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பதை அறிய, அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் கூறியதாவது:
ஐவாலா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ரேவ் பார்ட்டி நடந்துள்ளது. அங்கு ரெய்டு நடத்திய போது, போதைப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ரத்த மாதிரிகளின் அறிக்கை கிடைத்தபின் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த ரேவ் பார்ட்டியை யார் ஒருங்கிணைத்தனர்; யார், யாருக்கு தொடர்பு உள்ளது; ஒவ்வொருவரிடமும் 2,000 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதுவரை போதைப் பொருள் பயன்படுத்தியதாக தகவல் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

