அதானி விவகாரத்தை திசைதிருப்ப பா.ஜ., முயற்சி: பிரியங்கா குற்றச்சாட்டு
அதானி விவகாரத்தை திசைதிருப்ப பா.ஜ., முயற்சி: பிரியங்கா குற்றச்சாட்டு
UPDATED : டிச 10, 2024 09:15 PM
ADDED : டிச 10, 2024 07:23 PM

புதுடில்லி: '' அதானி குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த விரும்பாத பா.ஜ., அதனை திசைதிருப்புவதற்காக ஜார்ஜ் சோரஸ் விவகாரத்தை பற்றி பேசுகிறது ,'' என காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கூறினார்.
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கியது முதல் அதானி விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அதனை விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா தொடர்புடைய அமைப்புக்கு இந்தியாவுக்கு எதிரான கொள்கை உடைய அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் வழங்கும் நிதியுதவி குறித்து விவாதிக்க வேண்டும் என ஆளும் தரப்பு கூறி வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா கூறியதாவது: பா.ஜ.,வின் குற்றச்சாட்டு அபத்தமானது. 1994 ல் நடந்ததை பற்றி பேசுகிறார்கள். இதற்கு எந்த ஆவணமும் இல்லை. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதானி விவகாரத்தை விவாதிக்க அவர்கள் தயாராக இல்லாததால், இதனை செய்கிறார்கள்.
விவாதம் நடத்த வேண்டும் என நாங்கள் தினமும் பேசுகிறோம். ஆனால், விவாதம் நடத்த அவர்கள் விரும்பவில்லை. இந்த காரணத்தினால் தான் அவையை ஒத்திவைக்கிறார்கள். இவ்வாறு பிரியங்கா கூறினார்.