ADDED : டிச 17, 2024 11:40 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, தொழில் நஷ்டம், பொருளாதார பிரச்னை காரணமாக, தாய், மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து, பட்டாம்பி போலீசார் விசாரிக்கின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி வல்லப்புழை பகுதியை சேர்ந்தவர் முகிலா, 62, பல ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த நிலையில், முகிலாவும், திருமணமாகாத மகன் நிஷாந்த், 39, இருவரும் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும், வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை, அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு கண்டனர்.
தகவல் அறிந்து பட்டாம்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தை மீட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'தாய் ஹாலிலும், மகன் படுக்கை அறையிலும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். விசாரணையில், கடந்த, 10 ஆண்டுகளாக நிஷாந்த் பல்வேறு தொழில் செய்துள்ளார். ஆனால், பல்வேறு பிரச்னைகளால் தொழிலில் வெற்றி பெறவில்லை.
எர்ணாகுளம் பகுதியில் குளிர்பானங்கள் விற்பனை செய்யும், 'கூல்பார்' நடத்தி வந்தார். கடந்த, 10 நாட்களுக்கு முன் பொருளாதார பிரச்னை காரணமாக, கூல்பாரை மூடிவிட்டார். இவர்களின் தற்கொலைக்கு தொழில் நஷ்டம், பொருளாதார பிரச்னை, கடன் தொல்லை காரணமாக இருக்கலாம். இதுகுறித்து விசாரிக்கிறோம்,' என்றனர்.