ADDED : மே 20, 2025 01:15 AM
பாலக்காடு; தவறான உறவுக்கு இடையூறாக இருப்பதாக நினைத்து, 4 வயது மகனை கிணற்றில் வீசி, கொல்ல முயன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வாளையார் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா, 22. கணவரை பிரிந்து, 4 வயது மகனுடன், பெற்றோர் வீட்டில் வசிக்கும் இவர், கோவையில் துணிக்கடையில் வேலை பார்க்கிறார்.
கடந்த 17ம் தேதி மாலை ஸ்வேதா, தன் மகனை வீட்டின் அருகே உள்ள கிணற்றில் வீசி கொலை செய்ய முயன்றார். ஆனால், குழந்தை அதிர்ஷ்டவசமாக மோட்டார் குழாயில் சிக்கியது. குழந்தையின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர், கிணற்றில் இருந்து மீட்டனர்.
வாளையார் போலீசார், கொலை முயற்சி மற்றும் சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஸ்வேதாவை கைது செய்தனர்.
போலீசார் கூறுகையில், 'கணவனை பிரிந்து வாழும் ஸ்வேதாவுக்கு, கோவையை சேர்ந்த ஒருவருடன் தொடர்பு உள்ளது. இதற்கு மகன் இடையூறாக இருப்பதாக நினைத்து, கொல்ல துணிந்துள்ளார்' என்றனர்.