சிக்கன் சமைத்து தரும்படி கேட்ட மகனை சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற தாய்
சிக்கன் சமைத்து தரும்படி கேட்ட மகனை சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற தாய்
ADDED : செப் 30, 2025 03:32 AM

பால்கர்: மஹாராஷ்டிராவில் சிக்கன் சமைத்து தரும்படி ஆசையாக கேட்ட 7 வயது மகனை, அவரது தாய் சப்பாத்தி கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிராவின் பால்கரைச் சேர்ந்தவர் பல்லவி, 40. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்மயி கணேஷ், 7, என்ற மகன் மற்றும் 10 வயது மகளுடன் வசித்து வந்தார்.
கைது
இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பிள்ளைகள் இருவரும், தன் தாயிடம் சிக்கன் உணவு வகைகளை சமைத்து தரும்படி வற்புறுத்தினர்.
இதனால் ஆத்திரம்அடைந்த பல்லவி, சமையலறையில் இருந்த சப்பாத்தி கட்டையை எடுத்து, பிள்ளைகளை சரமாரியாக தாக்கினார்.
இதில் அவரது மகனும், மகளும் படுகாயங்களுடன் மயங்கி விழுந்தனர். இதற்கிடையே பிள்ளைகளின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதன்படி அங்கு வந்த போலீசார், மயங்கி விழுந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், சிறுவன் சின்மயி கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
எனினும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, சிறுவனின் உயிரிழப்புக்கு காரணமான அவரது தாய் பல்லவியை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 வயது சிறுவன் பலி
இதேபோல் உத்தர பிரதேசத்தின் கன்னோஜில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 15 வயது சிறுவன் ஒருவன், தன் தாத்தாவிற்காக சிக்கன் துண்டு கேட்டுள்ளார்.
இதை, அருகில் இருந்த சிலர் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த அச்சிறுவன், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர், சிறுவனை வெளியே இழுத்துச் சென்று அவனை செங்கற்களால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த சிறுவனை, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில், அச்சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.