ADDED : டிச 13, 2024 05:09 AM
கொடிகேஹள்ளி: குடும்ப பிரச்னையால் ஒரு பெண், தன் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு கொடிகேஹள்ளியின் பாலாஜி லே - அவுட், நான்காவது கிராசில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சுரேஷ், 40. இவர் தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக பணியாற்றுகிறார். இவரது மனைவி மனைவி குஸ்மா, 36. தம்பதிக்கு ஷ்ரேயான், 6, என்ற மகனும், சார்வி, 2, என்ற மகளும் உள்ளனர்.
குடும்ப பிரச்னையால், தம்பதி இடையே அவ்வப்போது சண்டை நடக்கும். இரண்டு நாட்களுக்கு முன்பும், வழக்கம் போன்று இருவர் இடையே வாக்குவாதம் நடந்தது. இதனால் குஸ்மா மனம் வருந்தினார். நேற்று முன்தினம் காலை, சுரேஷ் பணிக்கு சென்றுவிட்டார்.
அதன்பின் குஸ்மா, தன் மகன், மகளின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தார். தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு 9:30 மணிக்கு, சுரேஷ் வீட்டுக்கு வந்த போது, மனைவியும், குழந்தைகளும் இறந்து கிடப்பது தெரிந்தது.
தகவல் கிடைத்து அங்கு வந்த கொடிகேஹள்ளி போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டனர். குஸ்மா தற்கொலைக்கு முன், கடிதம் எழுதி வைத்து உள்ளார். அதில், தன் முடிவுக்கு தானே காரணம் என, குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.