ADDED : பிப் 15, 2024 04:42 AM

கலபுரகி : வரதட்சணை கேட்டு கணவர், மாமியார் தொல்லை கொடுத்ததால், 2 வயது மகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கலபுரகி சிஞ்சோலி மாரப்பள்ளி கிராமத்தின் ஆனந்த், 25. இவருக்கும் கெரோள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிவலீலா, 22 என்பவருக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வர்ஷிதா, 2, என்ற பெண் குழந்தை இருந்தது. கடந்த சில மாதங்களாக வரதட்சணையாக பணம், நகை வாங்கி வரும்படி, சிவலீலாவை, ஆனந்தும், அவரது தாயும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதனால் மனம் உடைந்த சிவலீலா, குழந்தையை துாக்கிக் கொண்டு, பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு, சிவலீலாவை சமாதானப்படுத்தி, ஆனந்த் அழைத்து வந்தார்.
ஆனால், மீண்டும் வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்தி உள்ளார். இந்நிலையில் நேற்று காலை, வர்ஷிதாவை கழுத்தை நெரித்து சிவலீலா கொலை செய்தார். பின்னர் அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிஞ்சோலி போலீசார் விசாரிக்கின்றனர்.

