ADDED : நவ 12, 2024 05:54 AM
மங்களூரு: பிறந்த குழந்தை உயிரிழந்ததால், மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
உடுப்பியின் கார்கலாவைச் சேர்ந்தவர் ஆச்சார்யா, 30. இவரது மனைவி ரஞ்சிதா, 28. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த மாதம் 29ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது.
மங்களூரு டவுனில் உள்ள லேடிகுஷன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு அறுவை சிகிச்சையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், ஐ.சி.யூ.,வில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கடந்த 3ம் தேதி குழந்தை இறந்தது.
அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததால், மருத்துவமனையில் ரஞ்சிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று மாலை, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருந்தார்.
நேற்று காலையில், மருத்துவமனையின் நான்காவது மாடிக்கு சென்ற ரஞ்சிதா அங்கிருந்து கீழே குதித்தார்.
பலத்த காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு, வென்லாக் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் ரஞ்சிதா இறந்து விட்டார்.
குழந்தை இறந்த விரக்தியில், ரஞ்சிதா தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.