தனது 'மேக்-அப்' சாதனத்தை மாமியார் பயன்படுத்தியதால் கடுப்பான மருமகள்: விவாகரத்து கேட்டு வழக்கு!
தனது 'மேக்-அப்' சாதனத்தை மாமியார் பயன்படுத்தியதால் கடுப்பான மருமகள்: விவாகரத்து கேட்டு வழக்கு!
UPDATED : ஜன 30, 2024 03:34 PM
ADDED : ஜன 30, 2024 01:35 PM

லக்னோ: உத்தரபிரதேசத்தில் மருமகளின் 'மேக்-அப்' பொருட்களை மாமியார் பயன்படுத்தியதால், விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் திருமணத்திற்கு நிகராக சமீப காலங்களில் விவாகரத்து வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. தற்போது கணவன்-மனைவி இடையே ஏற்படும் சின்ன பிரச்னைகளுக்கு கூட விவாகரத்து கேட்டு மனு அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பேசி தீர்த்து கொள்ளும் வகையில் உள்ள பிரச்னைகளுக்கு கூட பெண்கள் கொந்தளிக்கின்றனர்.
உத்தர பிரதேசத்தில் நூதனமான ஒரு விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றம் வந்துள்ளது. ஆக்ரா பகுதியை சேர்ந்த சகோதரிகள் இருவரை அப்பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், முதல் மருமகளின் 'மேக்-அப்' பொருட்களை அனுமதியின்றி மாமியார் அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் கொந்தளித்த மருமகள் மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது பெரிய சண்டையாக முற்றியது.
மாமியார் மகனிடம் தன்னை மருமகள் அவதூறாக பேசியதாக கூறியுள்ளார். இதையடுத்து மகன் தனது மனைவியை வீட்டை விட்டு தூரத்தியுள்ளார். மூத்த மருமகளின் தங்கையான இரண்டாவது மருமகளும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் கோபமடைந்த மருமகள்கள், தாய் பேச்சை கேட்டு நடக்கும் கணவர்களுடன் வாழ விருப்பம் இல்லை என்று விவாகரத்து கேட்டு குடும்பநல நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 'மேக்-அப்' பொருளால் மாமியார் - மருமகள் உறவு முறிந்துள்ளது பேசு பொருளாகி உள்ளது.