ரேபரேலி மக்களுக்கு சேவை செய்ய தாய் அளித்த வாய்ப்பு : உணர்ச்சி பெருக்கில் ராகுல்
ரேபரேலி மக்களுக்கு சேவை செய்ய தாய் அளித்த வாய்ப்பு : உணர்ச்சி பெருக்கில் ராகுல்
UPDATED : மே 03, 2024 06:41 PM
ADDED : மே 03, 2024 06:35 PM

ரேபரேலி: ரேபரேலி தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக எனது தாயார் வழங்கிய வாய்ப்பாக கருதுகிறேன் என காங்.எம்.பி., ராகுல் ரேபரேலி தொகுதியில் இன்று (03.05.2024) வேட்புமனு தாக்கல் செய்த பின் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தலில் உபி. மாநிலம், ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் காங். வேட்பாளர்கள் யார் என கடந்த சில மாதங்களாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், ராகுல், சோனியா, பிரியங்கா ஆகியோர் இன்று ரேபரேலி வந்தனர்.
சோனியாவின் சொந்த தொகுதியான ரேபரேலி தொகுதியில் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தார். அமேதி தொகுதியில் காங். மூத்த தலைவர் கே.எல்.சர்மா என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இது குறித்து ராகுல் கூறியது, ரேபரேலி, அமேதி தொகுதிகள் இரண்டும் எனது குடும்பம் ஆகும். எனது தாயார் நான் இத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என ஆர்வம் காட்டினார். ரேபரேலி தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பை எனது தாயார் வழங்கியுள்ளார். இத்தொகுதி மக்களின் ஆதரவுடன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் மூலம் அரசியல் சாசனத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க போராடுவேன். அமேதியில் போட்டியிடும் கே.எல். ஷர்மா மக்கள் சேவகர். கடந்த 40 ஆண்டுகளாக இத்தொகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவர். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.
பிரியங்கா விளக்கம்
முன்னதாக ரேபரேலி தொகுதியில் சோனியா மகள் பிரியங்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாம் போட்டியிடாதது குறித்து அளித்த பேட்டி, தேர்தலில் தீவிர பிரசாரம் செய்வதற்காகவே போட்டியிட வில்லை என்றார்.