பெங்களூரில் கார்களில் பொருத்த டாஷ்போர்டு கேமராவுக்கு 'மவுசு'
பெங்களூரில் கார்களில் பொருத்த டாஷ்போர்டு கேமராவுக்கு 'மவுசு'
ADDED : நவ 22, 2024 07:26 AM

பெங்களூரு: விபத்து ஏற்படும் போது யார் தவறு செய்தனர் என்பதை உறுதி செய்யும், டாஷ்போர்டு கேமராக்களை கார்களில் பொருத்த, உரிமையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், அத்தகைய கேமராக்களுக்கு, 'மவுசு' அதிகரித்து உள்ளது.
பெங்களூரு நகரில் தினமும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் ஓடுவதால், அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு, பச்சை விளக்காக மாறியதும், வாகன ஓட்டிகள் பறந்து செல்ல நினைக்கின்றனர்.
சில சமயங்களில் ஒரு வாகனம் மீது, மற்றொரு வாகனம் மோதி, விபத்து ஏற்பட்டு விடுகிறது. 'உன் மீது தான் தவறு' என்று கூறி, வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறிவிடுகிறது.
இந்நிலையில், சமீபகாலமாக 'ரோடு ரேச்' எனும் சாலை தகராறு, பெங்களூரில் அதிகரித்து உள்ளது. போக்குவரத்து போலீசார் எவ்வளவோ முயன்றும், சாலை தகராறை கட்டுப்படுத்த முடியவில்லை.
பெரும்பாலும் சாலை தகராறு காரை ஓட்டுவோருக்கும், பிற வாகன ஓட்டிகளுக்கும் இடையில் தான் நடக்கிறது.
குண்டும், குழியுமான சாலையில் காரை ஓட்டி செல்லும் போது எதிர்பாராதவிதமாக, இன்னொரு வாகனத்தின் மீது கார் மோதி விடுகிறது. இதனால் ஏற்படும் வாக்குவாதம் மோதலாக மாறிவிடுகிறது.
போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வரும் போது, இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் சொல்கின்றனர். உண்மையில் நடந்தது என்ன என்பதை கண்டறிய முடியாமல் போலீசார் குழம்புகின்றனர்.
இந்நிலையில் காரின் ஸ்டியரிங் அருகே, டாஷ்போர்டு கேமரா பொருத்துவதில், கார் உரிமையாளர்கள் சமீபகாலமாக அதிக ஆர்வம் காட்டுகின்றனர். என்ன நடந்தது என்பது, அந்த கேமராவில் அப்படியே பதிவாகி விடும். இதனால், போலீசார் விசாரணை நடத்துவதற்கும் உதவியாக இருக்கும். கார் ஓட்டுவோர் தவறு செய்யாத பட்சத்தில், டாஷ்போர்டு கேமரா அவர்களை காப்பாற்றுகிறது.
இதனால் புதிதாக கார் வாங்குவோர் கூட, கார் ஷோரூம்களில், காரில் டாஷ்போர்டு கேமரா வைத்தால் நல்லது என்று கேட்க ஆரம்பித்து உள்ளதால், டாஷ்போர்டு கேமராக்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டு உள்ளது. இந்த கேமரா 5,000 முதல் 13,000 ரூபாய் வரை கிடைக்கிறது.