டில்லி மேலிடத்தில் ம.ஜ.த., குமாரசாமிக்கு 'மவுசு!': கர்நாடக பா.ஜ., தலைவர்கள் காதில் புகை
டில்லி மேலிடத்தில் ம.ஜ.த., குமாரசாமிக்கு 'மவுசு!': கர்நாடக பா.ஜ., தலைவர்கள் காதில் புகை
ADDED : ஜூலை 05, 2024 06:16 AM

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்ற, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய அரசில் முக்கியமான துறைக்கு கேபினட் அமைச்சர் ஆகியுள்ளார். முக்கிய முடிவுகளை எடுக்கும் மத்திய அமைச்சரவை குழுக்களிலும் இவர் இடம் பிடித்துள்ளதால், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால், தங்களது முக்கியத்துவம் குறையுமோ என கர்நாடக பா.ஜ., தலைவர்கள், காதில் புகை வராத குறையாக, பொறாமையில் புழுங்குகின்றனர்.
திரைப்பட தயாரிப்பாளராக, வினியோகஸ்தராக தொழில் வாழ்க்கையை துவங்கியவர் குமாரசாமி. 1996 லோக்சபா தேர்தலில் முதல் முறையாக, அப்போதைய கனகபுரா தொகுதியில் வெற்றி பெற்று, எம்.பி.,யானார். தொடர்ந்து, எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., தேர்தல்களில் வெற்றி, தோல்விகளை மாறி மாறி சந்தித்தார்.
அரசு கவிழ்ந்தது
கடந்த 2006ல் காங்கிரஸ் தலைமையிலான தரம்சிங் அரசை கவிழ்க்கும் நோக்கில், பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள் கூட்டணி வைத்தன. அப்போது, இரு கட்சிகளும், தலா 20 மாதங்கள் வீதம் ஆட்சியை பகிர்ந்து கொண்டன.
முதல் 20 மாதங்கள் ம.ஜ.த.,வும், அதன்பின் 20 மாதங்கள் பா.ஜ.,வும் அரசு நடத்த ஒப்பந்தம் செய்து கொண்டன.
முதல் முறையாக, குமாரசாமிக்கு முதல்வராகும் யோகம் தேடி வந்தது. இவர் 20 மாதங்கள் முதல்வராக இருக்க, பா.ஜ., முழுமையான ஒத்துழைப்பு அளித்தது. ஆனால், 20 மாதங்கள் முடிந்ததும், முதல்வர் பதவியை பா.ஜ.,வுக்கு விட்டு தர குமாரசாமி மறுத்து விட்டார். இதனால் கூட்டணி முறிந்து, அரசு கவிழ்ந்தது.
அடுத்து, 2018 சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைந்த போது, காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு அமைந்தது. அப்போதும் குமாரசாமி முதல்வராக, காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது.
இந்த அரசும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் எதிர்ப்பால், 2019ல் கவிழ்ந்தது. அரசு கவிழ சித்தராமையா, மறைமுகமாக ஒத்துழைப்பு அளித்ததாக கூறப்பட்டது. அப்போது, முதல்வராக இருந்த தன்னை காங்கிரசார் குமாஸ்தா போன்று பயன்படுத்தியதாக, குமாரசாமி இப்போதும் குற்றம்சாட்டுகிறார்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில், வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே ம.ஜ.த., வெற்றி பெற்றிருந்தது. 'இந்த கட்சிக்கு இனி வருங்காலம் இல்லை. கர்நாடகாவில் ம.ஜ.த.,வின் அத்தியாயம் முடிந்தது' என, காங்கிரசார் விமர்சித்தனர். கட்சியில் இருந்தால் அரசியல் எதிர்காலம் இருக்காது என கருதி பல தலைவர்கள், காங்கிரசுக்கு தாவினர்.
மாண்டியாவில் வெற்றி
லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியிலும் ம.ஜ.த., வெற்றி பெறாது என, காங்கிரஸ் எதிர்பார்த்தது. ஆனால், கர்நாடக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. பா.ஜ.,வுடன், ம.ஜ.த., கூட்டணி வைத்து கொண்டது.
இது காங்கிரசுக்கு இடியாக அமைந்தது. லோக்சபா தேர்தலில் கோலார், மாண்டியா, ஹாசன் தொகுதிகளில், ம.ஜ.த., போட்டியிட்டது. மாண்டியாவில் குமாரசாமியே களமிறங்கினார்.
கோலார், மாண்டியாவில் ம.ஜ.த., வெற்றி பெற்றது. ஹாசன் தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், ஹாசனில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியதால், கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது.
அமோகமாக வெற்றி பெற்ற குமாரசாமி, மத்திய விவசாயத் துறை அமைச்சராவார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முக்கிய துறையான கனரக தொழில்கள் துறையின் கேபினட் அந்தஸ்து அவருக்கு கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு மத்திய அமைச்சரவை குழுக்களிலும் குமாரசாமி இடம் பிடித்துள்ளார்.
இதன் வாயிலாக, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட பா.ஜ., மேலிட தலைவர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு குமாரசாமிக்கு கிடைத்துள்ளது.
இதற்கிடையில், லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களுக்கு கிடைக்கவில்லை.
தற்போது, குமாரசாமிக்கு பா.ஜ., மேலிடத்தில் செல்வாக்கு அதிகரிப்பதை கண்டு, கர்நாடக பா.ஜ., தலைவர்கள் மனம் வெதும்புகின்றனர். குமாரசாமி நம்மை மதிக்காமல், டில்லி மேலிட தலைவர்களுடன் எல்லாவற்றையும் பேசி முடித்து கொள்வார் என்பதால், நாம் டம்மியாகி விடுவோமோ என்ற பயமும், அவர்களை வாட்டி வதைக்கிறது.
காங்கிரசுடன் ஒப்பிட்டால், பா.ஜ.,வுடனான கூட்டணி ம.ஜ.த.,வுக்கு லாபகரமாக இருக்கும் என, தேவகவுடா, குமாரசாமி நம்பினர். காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தபோது கசப்பான அனுபவங்களை குமாரசாமி சந்தித்தார்.
ஆனால், பா.ஜ., கூட்டணி நிம்மதியாக இருந்தது என்பதை, அவர் பலமுறை பகிரங்கமாக கூறியுள்ளார். இதை அலசி, ஆராய்ந்தே பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு, தேவகவுடாவும் பச்சைக்கொடி காண்பித்தார்.
தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை, குமாரசாமி எப்படி பயன்படுத்துவார், மாநிலத்துக்கு என்னென்ன திட்டங்களை கொண்டு வருவார் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.