ADDED : ஜன 23, 2025 05:06 AM
பெங்களூரு: ஹுன்னிகெரேவில் பி.டி.ஏ., எனும் பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் கட்டியுள்ள சொகுசு வில்லாக்களுக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இ - ஏலம் மூலம், வில்லாக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து, பி.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரு, துமகூரு சாலையின் ஹுன்னிகெரேவில், 31 ஏக்கர் பரப்பளவில், 271.46 கோடி ரூபாய் செலவில் வில்லாக்களை பி.டி.ஏ., கட்டியுள்ளது. மூன்று படுக்கை அறைகள் கொண்ட, 152 வில்லாக்கள், நான்கு படுக்கை அறைகள் கொண்ட 170 வில்லாக்கள் கட்டப்பட்டுள்ளன. அனைத்து வசதிகள் கொண்டவை.
சமீபத்தில் முதற்கட்டமாக 25 கார்னர் வில்லாக்களை, இ - ஏலம் மூலம், பி.டி.ஏ., விற்பனைக்கு வைத்தது. ஏலத்தில் 16 பேர் பங்கேற்றனர். 10 சதவீதத்துக்கும் அதிகமான தொகை பதிவு செய்த, ஏழு பேருக்கு வில்லாக்கள் விற்கப்பட்டன. மூன்று படுக்கை அறைகள் கொண்ட வில்லாக்கள், தலா 1.14 கோடி ரூபாய், நான்கு படுக்கை அறைகள் கொண்ட வில்லாக்கள், தலா 1.35 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டன.
அடுத்த கட்டத்தில் 80 வில்லாக்களை, இ - ஏலம் மூலம் விற்க பி.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. துமகூரு சாலை மற்றும் மாகடி சாலைக்கு நடுவில் வில்லாக்கள் இருப்பதால், போக்குவரத்து வசதி நன்றாக உள்ளது.
அனைத்து வில்லாக்களுக்கும் தனித்தனி பார்க்கிங் வசதி, இ.வி., சார்ஜிங், டூயல் பைப்லைன் வசதி, நீச்சல் குளம், பொழுதுபோக்கு மையம், பேட்மின்டன் கோர்ட், ஆரம்ப சுகாதார மையம், இரண்டு ரெஸ்டாரென்டுகள் உள்ளன.
தவிர 100 கே.வி., திறன் கொண்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளது. வில்லா பகுதியில் 27 பூங்காக்கள் உள்ளன. சுற்றிலும் 2.1 மீட்டர் உயரமான சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் இருப்பதால், மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஹுன்னிகெரேவில் கட்டப்பட்ட கிளப் ஹவுஸ் நிர்வகிப்புக்கு, பவுரிங் கிளப்புடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். ஏற்கனவே பவுரிங் கிளப் நிர்வாகத்தினர், ஹுன்னிகெரேவுக்கு சென்று, ஆய்வு செய்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***

