விபத்தில் இரு கால்களையும் இழந்த துப்புரவு தொழிலாளிக்கு உதவும் இயக்கம்
விபத்தில் இரு கால்களையும் இழந்த துப்புரவு தொழிலாளிக்கு உதவும் இயக்கம்
ADDED : பிப் 12, 2025 10:22 PM
துக்ளகாபாத்:பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் கால்களை இழந்த துப்புரவுத் தொழிலாளிக்கு நிதியுதவி அளிக்க ஒரு இயக்கத்தை டில்லி மாநகராட்சி துவங்கியுள்ளது.
மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வந்தவர் ஷிஷ் பால். கடந்த 4ம் தேதி பணியிட விபத்தில் சிக்கினார். இதனால் அவரது கால்கள் துண்டிக்க நேரிட்டது.
பாதிக்கப்பட்டுள்ள ஷிஷ் பால் குடும்பத்திற்கு உதவி செய்வதற்கு டில்லி மாநகராட்சி முன்வந்துள்ளது. இதற்காக மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள், தங்கள் பிப்ரவரி மாத சம்பளத்தில் இருந்து விரும்பும் தொகையை பிடித்து, ஷிஷ் பால் குடும்பத்திற்கு உதவ அளிக்கலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.
மாநகராட்சி ஆணையர் அஸ்வினி குமார் கூறுகையில், “காயமடைந்த தொழிலாளிக்கு மாநகராட்சி துணையாக இருக்கும். துப்புரவுத் தொழிலாளர்கள், நகரத்தின் தூய்மை மற்றும் நல்வாழ்வின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவும் வகையில் மாநகராட்சிப் பணியாளர்கள் தாராளமாக உதவ வேண்டும்,” என்றார்.
ஊழியர்கள், 15 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரை தங்களால் முடிந்த அளவு பங்களிப்பு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு செய்ய விரும்பாத ஊழியர்கள், 15ம் தேதிக்குள் விலக்கு கோரிக்கையை சமர்ப்பிக்கலாம்.
சேகரிக்கப்படும் மொத்தத் தொகையும் ஷிஷ் பாலின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் ஷிஷ் பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்திற்கு அவருக்கான சம்பளத்தை தொடர்ந்து வழங்கவும் மருத்துவ நிலையைப் பொறுத்து அவருக்கு இழப்பீடு வழங்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மேலும், நீண்டகால நிதி உதவியை உறுதி செய்யும் வகையில், குடும்ப உறுப்பினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவதாக மாநகராட்சி உறுதியளித்துள்ளது.

