ADDED : செப் 20, 2024 05:49 AM
பல்லாரி: நிலக்கரி நிறுவனத்தை ஏமாற்றி 2.11 கோடி ரூபாய் சுருட்டிய மத்திய பிரதேச வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பல்லாரி டவுனில், ஹிந்துஸ்தான் கால்சின்ட் மெட்டல் என்ற பெயரில், நிலக்கரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அகர்வால் என்ற நிறுவனத்திடம் இருந்து, நிலக்கரி வாங்கி இருந்தது. இதற்காக 2.11 கோடி ரூபாய், செலுத்த வேண்டி இருந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு, அகர்வால் நிறுவனத்தின் பெயரில், ஒரு மின்னஞ்சல் சென்றது. எங்கள் நிறுவனத்தின் வங்கிக்கணக்கு எண்ணை மாற்றி உள்ளோம். புதிய எண்ணை உங்களுக்கு, மின்னஞ்சலில் அனுப்பி உள்ளோம் என்று கூறப்பட்டு இருந்தது.
இதை நம்பிய ஹிந்துஸ்தான் நிறுவனம், மின்னஞ்சலில் வந்த வங்கிக்கணக்கிற்கு 2.11 கோடி ரூபாய் அனுப்பி வைத்தது. சில நாட்கள் கழித்து, நிலக்கரி வாங்கியதற்கு பணம் தரும்படி, ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு, அகர்வால் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியது.
அப்போது தான் யாரோ மர்மநபர், போலி மின்னஞ்சல் கணக்கு உருவாக்கி, பணத்தை சுருட்டியது தெரிந்தது. பல்லாரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய பிரதேச மாநிலம் சித்தியை சேர்ந்த, அஜய்குமார் ஜெய்ஸ்வால், 28 என்பவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.49 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் டில்லியை சேர்ந்த, ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்து உள்ளது. அவரை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.