ADDED : ஜன 24, 2025 11:43 PM

நரசிங்பூர்: மத்திய பிரதேசத்தில், 17 ஆன்மிக நகரங்களில் மது விற்பனையை தடைசெய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது:
மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் நம் அனைவருக்கும் தெரியும். மத்திய பிரதேசத்தில் மது விலக்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக, 17 ஆன்மிக நகரங்களில் உள்ள மதுக்கடைகள் மூடப்படும். ஒரு மாநகராட்சி, ஆறு நகராட்சிகள், ஆறு கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
உஜ்ஜைன் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்து மதுக்கடைகளும் முழுமையாக மூடப்படும். இது தவிர டாடியா, பண்ணா, மான்ட்லா, முல்டாய், மான்சோர், மைஹார் நகர்பாலிகா, ஓம்கரேஸ்வர், மகேஸ்வர், மண்டலேஷ்வர், அர்ச்சா, சித்ரகூட், மற்றும் அமர்கண்டக் நகர் பரிஷத் ஆகிய நகரங்களில் மதுக்கடைகள் மூடப்படும்.
குறிப்பாக ராமர் மற்றும் கிருஷ்ணர் பாதம் பதித்த நகரங்களில் மதுக்கடைகள் மூடப்படும். இந்த தடை வரும் ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

