ADDED : மே 06, 2025 02:29 AM
குவாலியர்: மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது.
குவாலியரில் உள்ள உணவகத்துக்கு தன் ஆதரவாளர்களுடன் வந்த பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ கல்வி இணையமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் ரகளையில் ஈடுபட்டதாக, உணவக உரிமையாளர் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து உணவக உரிமையாளர் சஞ்சய் அரோரா கூறியுள்ளதாவது:
நேற்று முன்தினம் இரவு, தன் ஆதரவாளர்களுடன் அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் வந்தார். அவர்களுக்கு முதல் மாடியில் இருக்கை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினோம். ஆனால், கீழ் தளத்திலேயே ஏற்பாடு செய்யும்படி தகராறில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வந்தனர். என் சகோதரரை அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால், உள்ளூர் வர்த்தகர்கள் வந்ததால், அதை கைவிட்டனர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் கூறியுள்ளதாவது:
குவாலியரில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து, அங்குள்ள உணவகங்களில் சோதனை செய்தேன்.
இந்த குறிப்பிட்ட உணவகத்தில் சோதனையின்போது, கலப்படப் பொருட்கள் பயன்படுத்தப்படுவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பரிசோதனைகளுக்குப் பின், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.