ஜார்க்கண்ட் அதிகாரிகள் மீது எம்.பி., நிஷிகாந்த் துபே உரிமை மீறல் புகார்
ஜார்க்கண்ட் அதிகாரிகள் மீது எம்.பி., நிஷிகாந்த் துபே உரிமை மீறல் புகார்
ADDED : ஆக 10, 2025 12:54 AM

ராஞ்சி: மத உணர்வுகளை புண்படுத்தியதாக, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே மீது ஜார்க்கண்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அம்மாநில தலைமை செயலர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.,க்கு எதிராக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர் உரிமை மீறல் புகார் அளித்துள்ளார்.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கோடா லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே, சக எம்.பி.,யான மனோஜ் திவாரி உடன், தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைத்யநாத் கோவிலுக்கு, கடந்த 2ம் தேதி சென்றார்.
புனித, 'ஷ்ரவண' மாதத்தில் பக்தர்கள் அதிகளவில் வ ருவர் என்பதால், வி.வி.ஐ.பி., தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோர், கருவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. கோவில் பூசாரி கார்த்திக் நாத் தாக்குர் அளித்த புகாரின்படி, நிஷிகாந்த் துபே, மனோஜ் திவாரி ஆகியோர் மீது பல்வேறு பிரிவு களில் போ லீசார் வழக்குப் பதிந்தனர்.
இதனால் கோபமடைந்த நிஷிகாந்த் துபே, “அரசியல் பழிவாங்கும் நோக்கில் என் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நான், பாபா பைத்யநாத் கோவில் அறங்காவலராக உள்ளேன். பூசாரியை விட உயர்ந்த பதவியில் இருக்கிறேன். இந்த பொய் வழக்குக்காக சரணடைய பைத்யநாத் தாம் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றேன். ஆனால் என்னை கைது செய்யவில்லை,” என்றார்.
இந்நிலையில், ஜார்க்கண்ட் தலைமை செயலர், மாநில டி.ஜி.பி., மற்றும் தியோகர் மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் மீது, அரசியலமைப்பின் 105வது பிரிவின் கீழ், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சிறப்பு உரிமை மீறல் புகார் அளித்துள்ளதாக, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே நேற்று தெரிவித்தார்.