பழங்குடியினர் ஹிந்துக்கள் அல்ல: ம.பி., எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சை பேச்சு
பழங்குடியினர் ஹிந்துக்கள் அல்ல: ம.பி., எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சை பேச்சு
ADDED : செப் 06, 2025 12:56 AM

சிந்த்வாரா: ''பழங்குடியினர் ஹிந்துக்கள் அல்ல,'' என, மத்திய பிரதேச சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உமாங் சிங்கர் கூறியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு காங்கிரசைச் சேர்ந்த உமாங் சிங்கர், எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
பெருமை நான்கு முறை எம்.எல்.ஏ.,வான இவர், ம.பி.,யின் மிகப்பெரிய பழங்குடி குழுவான பில் சமூகத்தைச் சேர்ந்தவர்.
சிந்த்வாரா மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த பழங்குடி மேம்பாட்டு கவு ன்சில் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உமாங் சிங்கர், ''நாங்கள் ஹிந்துக்கள் அல்ல. ஆதிவாசிகள் என்பதை பெருமையுடன் சொல்வேன்.
''இதை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். எந்த மதத்தையும் நாங்கள் அவமதிக்கவில்லை.
''ஆனால், எங்கள் சமூகம், மரபுகள், கலாசாரம், பாரம்பரியம் அங்கீகரிக்கப்பட வேண்டும். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பழங்குடியினருக்கு மரியாதை அளிக்க வேண்டும்,'' என்றார்.
வெட்கக்கேடு இதற்கு கண்டனம் தெரிவித்து, ம.பி., முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், ''ஹிந்துக்கள், ஹிந்துத்துவாவுக்கு எதிராக காங்., எப்போதும் செயல்படுவது துரதிருஷ்டவசமானது.
''இதற்காக அக்கட்சி தலைவர்கள் வெட்கப் பட வேண்டும். ஹிந்துத்துவா குறித்து கேள்வி எழுப்பினால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். உமாங் சிங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதிலளித்த உமாங் சிங்கர், ''பழங்குடி அடையாளத்தை ஹிந்து மதத்தின் கீழ் உட்படுத்த பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கின்றன.
''எங்களின் அடையாளத்தை அழித்து, ஹிந்துக்களாக மாற்ற முயற்சிப்பது ஏன்? பழங்குடியினர் மீது அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்., ஏன் இதுவரை பழங்குடி ஒருவரை அதன் தலைவராக நியமிக்கவில்லை?'' என, கேள்வி எழுப்பினார்.