ராணுவ கர்னல் ஸோபியா குறித்து அவதுாறு ம.பி., அமைச்சரின் மன்னிப்பை ஏற்க மறுப்பு
ராணுவ கர்னல் ஸோபியா குறித்து அவதுாறு ம.பி., அமைச்சரின் மன்னிப்பை ஏற்க மறுப்பு
ADDED : மே 20, 2025 04:52 AM
புதுடில்லி: ராணுவ கர்னல் ஸோபியா குரேஷி குறித்து அவதுாறு கருத்து தெரிவித்த மத்திய பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் மன்னிப்பை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை அமைக்க நேற்று உத்தரவிட்டது.
பாகிஸ்தான் மீது நம் ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து, நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, ராணுவ கர்னல் ஸோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களுக்கு தொடர்ச்சியாக விளக்கம் அளித்தனர்.
வழக்குப்பதிவு
இந்நிலையில், பா.ஜ., ஆட்சியில் உள்ள மத்திய பிரதேசத்தில், முதல்வர் மோகன் யாதவ் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் குன்வர் விஜய் ஷா, பொது நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசுகையில், கர்னல் ஸோபியா குரேஷி குறித்து அவதுாறு கருத்து தெரிவித்தார்.
அவர் பேசுகையில், 'நம் மகள்களின் நெற்றியில் இருந்து குங்குமத்தை பறித்தவர்களுக்கு பாடம் கற்பிக்க, அவர்களின் சகோதரியையே நாம் அனுப்பி வைத்தோம்' என்றார்.
இதற்கு நாடு முழுதும் கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை ம.பி., உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
அவதுாறு கருத்து தெரிவித்த அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யும்படி போலீசுக்கு உத்தரவிட்டது. போலீசார் மூன்று பிரிவுகளில் அமைச்சர் குன்வர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமைச்சர் குன்வர் விஜய் ஷா உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனு நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர் சிங் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் கருத்தால் இந்த தேசமே அவமானப்படுகிறது. நீங்கள் பேசிய, 'வீடியோ'வை பார்த்தோம். மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளீர்கள்.
முறையல்ல
அதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும். நம் ராணுவத்திற்காக தேசமே பெருமைப்படும் நேரத்தில், இப்படியொரு கருத்துகளை நீங்கள் தெரிவித்துள்ளீர்கள்.
நீங்கள் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட வீடியோவையும் பார்த்தோம். என்ன மாதிரியான மன்னிப்பு அது?
நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக பணிவான மொழியில் சிலர் மன்னிப்பு கோருவர். சிலர் முதலை கண்ணீர் வடிப்பர். இதில் உங்களுடைய மன்னிப்பு எந்த வகையை சார்ந்தது?
பொறுப்பான பதவியில் உள்ள நீங்கள் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்களோ, அப்படி பேசியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று கூறியுள்ளீர்கள். இது மன்னிப்பு கேட்கும் முறையல்ல.
எனவே, குன்வர் விஜய் ஷாவின் அவதுாறு பேச்சை விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை அமைக்கும்படி ம.பி., போலீஸ் டி.ஜி.பி.,க்கு உத்தரவிடுகிறோம்.
அந்த விசாரணைக் குழுவுக்கு ஐ.ஜி., அந்தஸ்து அதிகாரி தலைமை வகிக்க வேண்டும். அதில் ஒரு பெண் அதிகாரி இடம் பெற வேண்டும்.
இன்று காலை 10:00 மணிக்குள் விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் அறிக்கையை வரும் 28ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.