கட்சி கொடி கட்டாதவருக்கு எம்.பி., சீட்டா? காயத்ரியை தோற்கடிக்க 'ரேணு டீம்' வியூகம்
கட்சி கொடி கட்டாதவருக்கு எம்.பி., சீட்டா? காயத்ரியை தோற்கடிக்க 'ரேணு டீம்' வியூகம்
ADDED : மார் 19, 2024 06:41 AM

தாவணகெரே லோக்சபா தொகுதி, கர்நாடகாவின் பிரபலமான தொகுதிகளில் ஒன்றாகும். தற்போது பா.ஜ.,வின் சித்தேஸ்வர் எம்.பி.,யாக இருக்கிறார்.
இம்முறையும் போட்டியிட, ஆர்வம் காண்பித்தார். ஆனால் அவருக்கு சீட் கிடைப்பது சந்தேகம் என, தகவல் வெளியானது. கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி கொடுத்து, தன் மனைவி காயத்ரிக்கு சீட் பெற்றுக்கொண்டார்.
ஏற்கனவே சித்தேஸ்வருக்கு சீட் கொடுக்கக் கூடாது என, முன்னாள் அமைச்சர்கள் ரவீந்திர நாத், ரேணுகாச்சார்யா உட்பட, பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், சித்தேஸ்வரின் மனைவி காயத்ரிக்கு, கட்சி மேலிடம் சீட் கொடுத்துள்ளது.
இதனால் பல தலைவர்கள் கோபத்தில் உள்ளனர். காயத்ரியை தோற்கடிக்க இப்போதிருந்தே தயாராகின்றனர்.
இரவில் ஆலோசனை
தாவணகெரே மாநகராட்சி உறுப்பினர் அஜய்குமாரின் வீட்டில், ரவீந்திர நாத், ரேணுகாச்சார்யா, மாடாள் மல்லிகார்ஜுன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கருணாகர ரெட்டி, குருசித்தனகவுடர், பசவராஜ் நாயக், அரைகே மருத்துவமனை தலைவர் ரவிகுமார், லோகிகெரே நாகராஜ் உட்பட, பலரும் நேற்று முன் தினம் இரவு ஆலோசனை நடத்தினர்.
'தாவணகெரே தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கட்சிக்கு ஆதரவாக பணியாற்றமாட்டோம்' என, மேலிடத்துக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்தனர்.
கடந்த மூன்று, நான்கு நாட்களாக அவர்கள் கூட்டம் நடத்துகின்றனர். அவசியம் ஏற்பட்டால், சுயேச்சை வேட்பாளராக களமிறங்கவும், ரேணுகாச்சார்யா தயாராகிறார்.
கட்சி மேலிடத்திடம் போராடி சீட் பெற்ற சித்தேஸ்வருக்கு, மனைவியை வெற்றி பெறச் செய்வது, அவ்வளவு எளிதாக இருக்காது. இவரை தோற்கடிக்க காங்கிரசை விட, சொந்த கட்சியான பா.ஜ.,வில், பெரிய படையே தயாராக உள்ளது.
பங்களிப்பு பூஜ்யம்
ரேணுகாச்சார்யா கூறியதாவது:
தாவணகெரே லோக்சபா தொகுதிக்கு, தற்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளரை பா.ஜ., மாற்ற வேண்டும்.
மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தியதில், சித்தேஸ்வராவின் பங்களிப்பு பூஜ்யம். சட்டசபை தேர்தலில் கட்சி வேட்பாளரின் தோல்விக்கும், அவரே காரணம்.
அவர் கட்சி வேட்பாளரின் வெற்றிக்காக உழைத்தது இல்லை. தீவிரமாக பிரசாரமும் செய்ததில்லை. வெறும் நான்கைந்து மணி நேரம் மட்டுமே பிரசாரம் செய்வார்.
இவரது குடும்பம், எப்போது பா.ஜ., கொடியை கட்டியது; எங்கு கட்டியது? கட்சி வளர்ச்சிக்கு இவர் எதுவும் செய்யவில்லை. சித்ரதுர்கா மற்றும் தாவணகெரேவில், பா.ஜ.,வை பலப்படுத்தியது ரவீந்திர நாத் தலைமையிலான தலைவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
.- நமது நிருபர் -

