ராஜ்யசபாவிலும் எம்.பி.,க்கள் காரசார விவாதம் : நள்ளிரவு வரை நீடித்தது
ராஜ்யசபாவிலும் எம்.பி.,க்கள் காரசார விவாதம் : நள்ளிரவு வரை நீடித்தது
ADDED : ஏப் 04, 2025 02:33 AM

வக்ப் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, ராஜ்யசபாவிலும் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை விவாதம் நடைபெற்றது.
மசோதாவை தாக்கல் செய்த, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ''இந்த மசோதா முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்காது; மாறாக, வக்ப் சொத்துக்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகூறல் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.
''பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் அனைத்து பிரிவு முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்,'' என்றார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, சபையில் காரசார விவாதம் நடந்தது.
வக்ப் மசோதா, லோக்சபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு, 12 மணி நேர நீண்ட விவாதத்துக்கு பின், 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் நள்ளிரவில் நிறைவேறியது.
சச்சார் கமிட்டி
இந்நிலையில், பார்லிமென்ட் விவகாரம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நேற்று தாக்கல் செய்து பேசியதாவது:
காங்கிரஸ் ஆட்சி காலத்தில், முஸ்லிம்களின் பிரச்னைகளுக்காக அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டி, பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.
அதில், வக்ப் வாரியங்கள் அனைத்தையும் பலம் வாய்ந்ததாகவும், உள்கட்டமைப்பு மிக்கதாகவும் வலுப்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது.
கடந்த 2006ல், 4.9 லட்சம் வக்ப் சொத்துக்கள் இருந்தன. அதிலிருந்து ஆண்டுக்கு, 160 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. தற்போதுள்ள வக்ப் சொத்துக்களின் எண்ணிக்கை, 8.72 லட்சம். இவற்றை சரிவர நிர்வகித்தால், 12,000 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
மத்திய வக்ப் கவுன்சில், மாநில வக்ப் வாரியங்கள் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் விதமாக பரந்து விரிந்த கண்ணோட்டத்துடன் செயல்பட வேண்டும் என, சச்சார் கமிட்டி கூறியுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், பெண்கள் நலன்களை வக்ப் அமைப்புகள் கருத்தில் வைத்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அந்த குழு கூறியது. அதைத்தான் நாங்கள் செய்துள்ளோம்.
முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் தலைமையிலான பார்லிமென்ட் கூட்டுக்குழுவும்கூட, வக்ப் அமைப்புகளின் உள்கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் என்றே கூறியுள்ளது. எனவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டும்.
இந்த மசோதா முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதில் உண்மையில்லை.
இந்த மசோதாவுக்கு மதத்துடன் தொடர்பில்லை; அது சொத்துக்களை மட்டுமே கையாளும். முறையான ஆவணங்களுடன் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட சொத்துக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.
பெண்களுக்கு அதிகாரம்
சர்ச்சைக்குரிய நிலம் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கையில் நாம் தலையிட முடியாது.
வக்ப் சொத்துக்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புகூறல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவது, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்த மசோதாவின் நோக்கம்.
ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம் மதத்தை கடைப்பிடிப்பவராக இருந்தால் சொத்துக்களை வக்ப் வாரியத்துக்கு தானமாக அளிக்கலாம் என சட்ட திருத்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, வக்ப் சொத்துக்களை யார் வழங்க முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதேபோல, சன்னி, ஷியா உட்பட அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியதாக வக்ப் கவுன்சில் இருக்கும்.
மத்திய கவுன்சிலில் உள்ள, 22 உறுப்பினர்களில் நான்கு பேர் முஸ்லிம் அல்லாதோராக இருப்பர், எந்த மதத்தையும் சார்ந்தவராக இருக்கக்கூடிய பார்லி உறுப்பினர்கள் மூன்று பேரும், இரண்டு பெண்களும் உறுப்பினராக இருப்பர்.
எனவே முஸ்லிம் அல்லாதோர் பிரதானமாக இருப்பர் என்ற பேச்சுக்கே இடமில்லை. வக்ப் சொத்துக்களை முறையாக நிர்வகித்தால் அடுத்த சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் வளம் பெறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.
எதிர்க்கிறோம்
தி.மு.க., எம்.பி., சிவா பேசியதாவது:
இந்த மசோதாவை எதிர்க்கிறோம். காரணம், இந்த மசோதா சட்டவிரோதமானது. இந்த அரசுக்கு காதுகள் இருக்கின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளின் குரல் மட்டும் அவற்றுக்கு கேட்காது.
கண்கள் உள்ளன. அவை, பாதிக்கப்படுகிறவர்களை பார்க்காது. வாய் உள்ளது. அது எதிர்க்கட்சிகளை மட்டும் வசை பாடும். கைகளும் உள்ளன. அவை, நலிவடைந்தோர் மீது மட்டும் அதிகாரம் செலுத்தும்.
நிர்வாக காரணங்களுக்காக இந்த மசோதா என்று கூறினாலும், அதிகாரத்தைகையில் எடுப்பதே இதன் நோக்கம்.
இது மதச்சார்பின்மைக்கு எதிரான மசோதா. உச்ச நீதிமன்றத்தில் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்த அரசு அடிக்கடி, 'சப்கா ஸாத்; சப்கா விகாஸ்' என கூறுகிறது. 'அனைவரும் ஒன்று சேர்வோம்; அனைவரையும் உயர்த்துவோம்' என்பதே இதன் அர்த்தம் என்கின்றனர்.
ஆனால் முஸ்லிம்கள் விஷயத்தில், அவர்களை தனிமைப்படுத்துவது, ஓரங்கட்டுவது, கீழே தள்ளிவிடுவது என்ற ரீதியில் அணுகுமுறையை மேற்கொள்கின்றனர்.
பல மதங்களுக்கும் சொந்தமானது இந்த நாடு. ஆனால், ஒரே மதம்; ஒரே மொழி, என்கிறது இந்த அரசு. எதிர்க்கட்சிகள் அளித்த பரிந்துரைகளை அரசு நிராகரித்துள்ளது. பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்கப்பட்டதன் நோக்கமே சிதைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
மசோதாவுக்கு ஆதரவாக ஆளும் கூட்டணி உறுப்பினர்களும், எதிராக எதிர்க்கட்சியினரும் காரசாரமாக விவாதித்தனர். நள்ளிரவு வரை விவாதம் தொடர்ந்தது.
தற்போதைய வக்ப் சட்டத்தை தவறாக பயன்பத்தி, ஏரிகள் உட்பட, 5,970 அரசு சொத்துக்கள், வக்ப் சொத்துக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஜே.பி.நட்டா ராஜ்யசபா எம்.பி., பா.ஜ.,
சட்டப்படி வக்ப் சொத்துக்கள் கடவுளுக்கு சொந்தமானவை;. அவற்றை விற்க முடியாது. மத காரியங்களுக்கோ, பள்ளி அல்லது காப்பக பயன்பாட்டுக்கு அவற்றை தானமாக அளிக்க முடியும். அறக்கட்டளை மட்டுமே சொத்துக்களை விற்க முடியும்.கபில் சிபல்
ராஜ்யசபா எம்.பி., சுயேச்சை
தொடர்ந்து நள்ளிரவு 2:00 மணியளவில் விவாதம் நிறைவு பெற்று, வாக்கெடுப்பு நடந்தது.
- நமது டில்லி நிருபர் -