எம்.பி.,க்கள் குழு விவகாரம்; மத்திய அரசு மீது காங்., புகார்
எம்.பி.,க்கள் குழு விவகாரம்; மத்திய அரசு மீது காங்., புகார்
ADDED : மே 20, 2025 07:15 AM

புதுடில்லி : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளை சேர்ந்த 52 எம்.பி.,க்கள், பல்வேறு நாடுகளுக்கும் சென்று இது குறித்து விளக்கவுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அரசிடம் தாங்கள் பரிந்துரைத்த எம்.பி.,க்களை வேண்டுமென்றே தவிர்த்துவிட்டு, வேறு நான்கு பேரை தேர்வு செய்ததாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுக்களுக்கான பெயர்களை பரிந்துரைக்கும்படி, மத்திய அரசு யாரிடமும் கேட்கவில்லை' என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்., மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
இது ஒரு முழுமையான பொய். இந்த விவகாரம் தொடர்பாக காங்., தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரை தொடர்பு கொண்டு கிரண் ரிஜிஜு பேசினார். இதன் தொடர்ச்சியாகவே ஆனந்த் சர்மா, கவுரவ் கோகோய், சையத் நசீர் உசேன், அமரீந்தர் சிங் ராஜா வாரிங் ஆகியோரின் பெயர்களை பரிந்துரைத்து கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், அதில் சர்மா மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்., அனுப்பிய பட்டியலில் இல்லாத சசி தரூர், மணீஷ் திவாரி, அமர் சிங், சல்மான் குர்ஷித் ஆகியோரை மத்திய அரசு சேர்த்துள்ளது. நான்கு தலைவர்களும் அனுபவம் வாய்ந்தவர்கள் தான். அவர்களில் ஒருவர் முன்னாள் வெளியுறவு அமைச்சர். ஆனால், தேர்வு குறித்து காங்கிரசிடம் தெரிவித்திருக்க வேண்டும்; கட்சி தலைமையிடம் கருத்து கேட்டு ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.