நேர்மையான முறையில் ஜேபிசி ஆய்வு: லோக்சபா சபாநாயகருக்கு எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
நேர்மையான முறையில் ஜேபிசி ஆய்வு: லோக்சபா சபாநாயகருக்கு எம்.பி.,க்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 24, 2025 08:47 PM

புதுடில்லி: '' வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஜே.பி.சி.,யின் நடவடிக்கைகள் நேர்மையான முறையில் இருக்க வேண்டும்,'' என குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.,க்கள் லோக்சபா சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, பார்லி., கூட்டுக்குழு அனுப்பப்பட்டது. இன்று பார்லிமென்ட் வளாகத்தில் குழுக் கூட்டம், குழு தலைவர் ஜெகதாம்பிகா பால் தலைமையில் நடந்தது. அப்போது அரசுக்கு எதிராகவும், கூட்டுக்குழு தலைவருக்கு எதிராகவும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக தி.மு.க., எம்.பி., ராசா உள்ளிட்ட 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: ஜே.பி.சி., விசாரணை நேர்மையான முறையிலும், நியாயமான முறையிலும் நடக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்க கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்.
எங்களின் கோரிக்கை கேட்கப்பட வேண்டும் என்பதற்காக ஜனநாயக முறைப்படி நாங்கள் எங்கள் குரலை எழுப்பினோம். ஆனால், குழுவின் தலைவர் மொபைல் போனில் யாருடனோ பேசிய பிறகு திடிரென எழுந்து எங்களை சஸ்பெண்ட் செய்வதாக சத்தமிட்டு உத்தரவிட்டார்.
வக்பு வாரிய மசோதாவில் உள்ள சட்டத்திருத்தங்கள் நாடு முழுவதும் உள்ள நிலங்கள் தொடர்புடையது அல்ல. சுப்ரீம் கோர்ட் மற்றும் பல்வேறு மாநில ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்புகள் தொடர்பாகவும் உள்ளது.
வக்பு வாரியம் தொடர்பாக பல்வேறு மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள விதிகளுக்கு சவாலாக உள்ளது. இதனால், அங்கு குழப்பம் ஏற்படும். இதனால், இந்தவிவகாரத்தில் எழுப்பப்பட்ட பிரச்னைகளை முழுமையாக நிவர்த்தி செய்ய ஜேபிசி ஒரு விரிவான ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம்.ஆனால், குழு தலைவர் முழு மனதோடு செயல்படாமல் ஜேபிசி.,யின் நடவடிக்கைகளை அவசரப்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர்கள் தங்களது கடிதத்தில் கூறியுள்ளனர்.

