தோனிக்கு மன்னிப்பே இல்லை; கொந்தளிக்கிறார் யுவராஜ் தந்தை; வாழ்க்கையை கெடுத்து விட்டதாக குற்றச்சாட்டு!
தோனிக்கு மன்னிப்பே இல்லை; கொந்தளிக்கிறார் யுவராஜ் தந்தை; வாழ்க்கையை கெடுத்து விட்டதாக குற்றச்சாட்டு!
UPDATED : செப் 02, 2024 12:41 PM
ADDED : செப் 02, 2024 09:27 AM

புதுடில்லி: 'இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி கெடுத்து விட்டார். அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்' என யுவராஜ் சிங்கின் தந்தை யோகிராஜ் கோபமாக தெரிவித்தார்.
யுவராஜ் சிங்கின் தந்தை யோகிராஜ் (வயது 63), தோனியை கண்ட மாதிரி தாக்கி பேசுவது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் துவக்கத்தில், ' தோனியின் மோசமான செயல்களால், சென்னை சூப்பர் கிங்ஸ் 2024ல் ஐ.பி.எல்., வெற்றி வாய்ப்பு நழுவியது. யுவராஜ் மீது தோனி பொறாமைப்படுகிறார்' என்றார்.
'ஏன் தோற்றார்கள், நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். தோனியின் பொறாமை தான் காரணம், அவர் யுவராஜுடன் கூட கைகுலுக்கவில்லை, அதனால்தான் இந்த ஆண்டு ஐ.பி.எல்., வெற்றி வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இழந்தது' என யோகிராஜ் பேசிய வீடியோ ஒன்று வைரலானது.
யோகிராஜ் காட்டம்
இந்நிலையில் இப்போது மீண்டும் யோகிராஜ் தோனியை குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
'யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி கெடுத்து விட்டார். அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்' என யோகிராஜ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: தோனியை நான் மன்னிக்க மாட்டேன். அவரது முகத்தை அவரே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும்' என்று கூறியுள்ளார்.
மன்னிக்க முடியாது!
'அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால் என் மகனுக்கு எதிராக அவர் செய்தது எல்லாம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து கொண்டிருக்கிறது. இதை என்னுடைய வாழ்நாளில் மன்னிக்க முடியாது என்றும் யோகிராஜ் கூறியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.