எம்.எஸ்.ஐ.எல்., சுற்றுலா திட்டங்கள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் அறிமுகம்
எம்.எஸ்.ஐ.எல்., சுற்றுலா திட்டங்கள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் அறிமுகம்
ADDED : ஜன 09, 2025 06:46 AM

பெங்களூரு: ''நான்கு சுற்றுலா திட்டங்களை எம்.எஸ்.ஐ.எல்., எனும் மைசூரு விற்பனை சர்வதேச நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 20,000 ரூபாயில் வட மாநில ஆன்மிக தலங்களுக்கு சென்று வரலாம்,'' என, மாநில கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
எம்.எஸ்.ஐ.எல்.,ன் 2025ம் ஆண்டு காலண்டர், டைரிகளை அமைச்சர் எம்.பி.பாட்டீல் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: தரம், நம்பிக்கையை ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எம்.எஸ்.ஐ.எல்., கடைபிடித்து வருகிறது. இத்தகைய நிறுவனம் சார்பில் ஏழை, நடுத்தர மக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள், அரசு ஊழியர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு செப்டம்பரில், ஆதி கைலாஷ், வாரணாசி அழைத்துச் செல்லப்படுவர். பாதுகாப்பு, தரமான உணவு, வயதானவர்களுக்கு உதவ உதவியாளர், தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வசதி, 'லக்கி டிரா' என குறைந்த கட்டணம் ஆகிய சலுகைகள் உள்ளன.
இந்த சுற்றுலாவில் ஒவ்வொரு முறையும் 100 பேராக அழைத்துச் செல்லப்படுவர். 15 முதல் 18 நாள் வட மாநிலங்கள் சுற்றுலாவுக்காக, 20,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதுபோன்று பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படுகிறது. இவர்களுக்காக 'கல்வி சுற்றுலா, இயற்கை சுற்றுலா, கடலோர சுற்றுலா' என்ற மூன்று வகைகளில் அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள், முதலில் 50 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை, தவணை முறையில் மாதந்தோறும் செலுத்தலாம்.
சுற்றுலாவுக்கு வருவோர் பெயர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தேர்வானோர், இலவசமாக அந்த சுற்றுலாவில் பங்கேற்கலாம். பணம் செலுத்தியிருந்தால், திரும்பித் தரப்படும்.
இந்த சுற்றுலாவில் பயணியருக்கு வசதியாக சுற்றுலா மேலாளர், உதவியாளர் உங்களுடன் இருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.