மூடா முறைகேடு; கர்நாடக முதல்வருக்கு சிக்கல்; 3 மாதம் கெடு விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி
மூடா முறைகேடு; கர்நாடக முதல்வருக்கு சிக்கல்; 3 மாதம் கெடு விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி
ADDED : செப் 25, 2024 03:58 PM

பெங்களூரூ: மூடா முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் சித்தராமையா மீதான மூடா எனும் மைசூரு மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் சித்தராமையா அவரது மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனை ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம், மைசூரு லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார்.
அதனை ஏற்று முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னர் அனுமதி அளித்தார். கவர்னர் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி, உயர்நீதிமன்றத்தில் முதல்வர் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இதற்கிடையில், மூடா முறைகேடு தொடர்பாக, முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, ஸ்நேமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி, முதல்வர் சித்தராமையா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டார்.
மேலும், 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கும் ஆபத்தை உண்டாக்கியுள்ளது.
இதனிடையே, முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.