ADDED : நவ 20, 2024 12:10 AM

மைசூரு; 'முடா' முறைகேடு வழக்கில் முன்னாள் கமிஷனர் நடேஷ் நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.
முடா எனும் மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணையம் வீட்டுமனை ஒதுக்கியதில், முறைகேடு நடந்தது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தேசாய் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.
முடா முறைகேடு தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் மீதும் லோக் ஆயுக்தா, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், முடா முன்னாள் கமிஷனர்களான நடேஷ், தினேஷ்குமார் ஆகியோர் தங்கள் இஷ்டத்திற்கு வீட்டுமனைகள் ஒதுக்கியது தெரிந்தது. இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி நடேசுக்கு, லோக் ஆயுக்தா சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு வந்த நடேஷ், எஸ்.பி., யுதேஷ் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஒன்பது மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
பின், வெளியே வந்த அவர் கூறுகையில், ''முடாவில் நடந்த முறைகேடு பற்றி லோக் ஆயுக்தா போலீசார் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். தேவைப்பட்டால் இன்னொரு முறை சம்மன் அனுப்புவதாக கூறினர். மீண்டும் சம்மன் வந்தாலும் விசாரணைக்கு ஆஜராக தயார்,'' என்றார்.