ADDED : ஆக 07, 2024 06:06 AM

மைசூரு : ''மூடா முறைகேட்டில் காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., என மூன்று கட்சிகளுக்கும் தொடர்பு உள்ளது,'' என பா.ஜ., -- எம்.எல்.சி., விஸ்வநாத் கூறினார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'மூடா' முறைகேட்டில் முதல்வர் சித்தராமையா பதவி விலக கோரி, எதிர்க்கட்சிகள் பாதயாத்திரை நடத்துகின்றன. எதிர்க்கட்சிகளை கண்டித்து காங்கிரஸ் மக்கள் இயக்கம் என்ற பெயரில் மாநாடு நடத்துகிறது. பாதயாத்திரை, மாநாடு மூலம் கவுரவத்தை கட்சிகள் ஏலம் விடுகின்றன. மக்கள் நலனை விட, குடும்ப நலன் தான் அதிகமாக உள்ளது.
தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அருவருப்பாக உள்ளன. எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்பதை கூட மறந்து விட்டனர். சமூக நீதியை கடைப்பிடிப்பதாக முதல்வர் கூறுவது வெறும் மாயை. அவர் நேர்மையானவராக இருந்தால், மூடா முறைகேட்டை சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுத்திருக்க வேண்டும்.
மூடா முறைகேட்டில் காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., என மூன்று கட்சிகளுக்கும் தொடர்பு உள்ளது. நகர வளர்ச்சி அமைச்சர் பைரதி சுரேஷ், மூடா முறைகேடு தொடர்பான ஆவணங்களை எடுத்து சென்று விட்டார். அந்த ஆவணங்கள் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.