முகமது யூனுஸ் அரசு நீண்ட காலம் நீடிக்காது; வங்கதேச வன்முறை குறித்து அசாம் முதல்வர் கருத்து
முகமது யூனுஸ் அரசு நீண்ட காலம் நீடிக்காது; வங்கதேச வன்முறை குறித்து அசாம் முதல்வர் கருத்து
UPDATED : டிச 24, 2025 05:32 AM
ADDED : டிச 23, 2025 06:17 PM

புதுடில்லி: முகமது யூனுஸ் அரசு நீண்ட காலம் நீடிக்காது. தற்போதைய ஆட்சி, இந்தியாவிற்கு, குறிப்பாக எல்லை மாநிலங்களுக்கு மிகவும் கவலையளிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.
இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: வங்கதேசத்தில் நிலவும் அமைதியின்மை, இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளுக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தும்.
சிக்கன் நெக்' என்று அழைக்கப்படும் சிலிகுரி வழித்தடம், இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். வடகிழக்கை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் இந்த குறுகிய பகுதியின் இருபுறமும் வங்கதேசம் அமைந்து உள்ளது. இதை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்.
முகமது யூனுஸ் அரசு நீண்ட காலம் நீடிக்காது. தற்போதைய ஆட்சி இந்தியாவிற்கு, குறிப்பாக எல்லை மாநிலங்களுக்கு மிகவும் கவலையளிக்கும் சூழ்நிலைகளை உருவாக்கியுள்ளது. தற்போதைய சவால் இந்தியா முன்பு எதிர்கொண்ட எதையும் போலல்லாமல் உள்ளது. இந்த பிரச்னைகளுக்கு காங்கிரஸ் ஆட்சியின் போது மேற்கொண்ட தவறான கொள்கைகளே காரணம்.
அசாம் மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் இப்போது வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். சுதந்திரத்தின் போது வெறும் 10-15 சதவீதமாக இருந்தது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி காலத்திற்குப் பிறகு, வங்கதேசம் பயங்கரவாதத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. இவ்வாறு ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.

