‛பாலியல்' முகேஷூக்கு பச்சாதாபம் காட்டும் மார்க்சிஸ்ட் கட்சி: ராஜினாமா செய்ய வேண்டாமாம்!
‛பாலியல்' முகேஷூக்கு பச்சாதாபம் காட்டும் மார்க்சிஸ்ட் கட்சி: ராஜினாமா செய்ய வேண்டாமாம்!
ADDED : ஆக 31, 2024 05:39 PM

திருவனந்தபுரம்: பாலியல் புகாருக்கு உள்ளாகி உள்ள கேரள நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான முகேஷ், பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய தேவையில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்து உள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டு மலையாள நடிகை ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகி மலையாள திரைப்பட உலகை புரட்டி போட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகைகள் ஒருவர் பின் ஒருவராக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
அந்த வகையில் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.,வான முகேஷ் உள்ளிட்ட 4 முக்கிய நடிகர்கள் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், முகேஷ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ஆலோசனைக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்வி கோவிந்தனர் நிருபர்களிடம் கூறியதாவது: பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டது என்ற ஒரு காரணத்திற்காக முகேஷ் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யத் தேவையில்லை. அதேநேரத்தில் சினிமா தயாரிப்பு கொள்கை குழுவிலும் அவர் இடம்பெறக்கூடாது. அந்த குழுவில் இருந்து விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, குற்றச்சாட்டுகளுக்கு தார்மீக பொறுப்பேற்று முகேஷ் பதவி விலகுவாரா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கோவிந்தன் கூறுகையில், முகேஷ் தார்மீக அடிப்படையில் எம்.எல்.ஏ., ஆக தேர்வு செய்யப்படவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டார். நாடு முழுதும் 16 எம்.பி.,க்கள் 135 எம்.எல்.ஏ.,க்கள் மீது பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், அவர்கள் பதவி விலகவில்லை. இதனால், முகேஷூம் பதவி விலக தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.