மும்பை - கொங்கனுக்கு புதிய போக்குவரத்து: பைக், கார்களுடன் கப்பலில் பயணிக்கலாம்
மும்பை - கொங்கனுக்கு புதிய போக்குவரத்து: பைக், கார்களுடன் கப்பலில் பயணிக்கலாம்
ADDED : ஆக 27, 2025 11:38 PM

மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து, கொங்கன் பகுதியான விஜய்துர்க் கோட்டைக்கு வெறும் ஐந்து மணி நேரத்தில் சென்றடையலாம். இதற்காக பிரத்யேக கப்பல் சேவை செப்., 1ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த கப்பலில் நம் சொந்த வாகனங்களையும் ஏற்றிக் கொண்டு பயணிக்கலாம்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகம். சாலை மார்க்கமாக செல்லும்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக, 12 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. இதற்கு முடிவு கட்ட, மாநில அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
மும்பையில் இருந்து கோவா அருகே உள்ள கொங்கன் பகுதியான விஜய்துர்க் கோட்டை வரை, அடுத்த மாதம் 1ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து துவங்குகிறது. இந்த கப்பல் போக்குவரத்தில் இன்னொரு வசதியும் இருக்கிறது. நம் சொந்த வாகனத்தையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்ல முடியும்.
அதாவது, 'ரோ - ரோ' என்றழைக்கப்படும் 'ரோல் ஆன், ரோல் ஆப்' கப்பல் சேவை. கார், இரு சக்கர வாகனத்துடன் இந்த கப்பலில் ஏறி, செல்ல வேண்டிய இடத்தை விரைவாக அடைய முடியும். இதற்காக இந்த கப்பலில், 'எகனாமி' வகுப்பில் பயணிக்க 2,500 ரூபாயும், முதல் வகுப்பில் பயணிக்க 9,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வாகனத்துடன் சென்றால் காருக்கு 6,000 ரூபாயும், இருசக்கர வாகனத்துக்கு 1,000 ரூபாயும், சைக்கிளுக்கு 600 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக கப்பலில் 50 கார்கள், 30 பைக்குகள் மற்றும் மினி பஸ்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கப்பல் சேவை துவங்கினால், மும்பையில் இருந்து ரத்னகிரியை மூன்று மணி நேரத்திலும், கொங்கனில் உள்ள விஜய்துர்க் பகுதியை ஐந்து மணி நேரத்திலும் அடையலாம். இதே பகுதிக்கு சாலையில் சென்றால், 10 முதல் 12 மணி நேரம் வரை ஆகும்.
உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக, மஹாராஷ்டிராவின் மீன் வளம் மற்றும் துறைமுக வளர்ச்சி துறை அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இதே போன்ற ஒரு கப்பல் சேவை மும்பை முதல் அலிபாக் வரை இயக்கப்பட்டு வருகிறது. அதில் கிடைத்த வெற்றியை அடுத்து, கொங்கன் வரை இந்த போக்குவரத்து துவங்கப்பட உள்ளது.